சிறகை விரி உலகை அறி - 93: மனநலம் காக்கும் தந்தையும் மகளும்!

பிராய்டின் அறை
பிராய்டின் அறை

நிகழ்வுகளை நினைவுகளாகவும் காட்சிகளாகவும் சேகரிக்கின்றன நிழற்படக் கருவிகள். திறன்பேசிகளின் வரவு, கூடுதல் சாத்தியம். ஆனால், திறன்பேசிகளின் கொள்ளளவு நிறைகிறபோது ஆசையாய் சேகரித்த நினைவுகள் நீக்கப்படுகின்றன. திறன்பேசிகளைத் தவறவிட்டோம் என்றால், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் அரிதான படங்களும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட ஆவனங்களும் இல்லாமலாகின்றன. அனைத்தின் உச்சமாக, ஒருவர் இறக்கும்போது அவரின் ஆயிரக்கணக்கான படங்களும், வாழ்வின் சுவடுகளும் திறன்பேசிக்குள் மரணித்துவிடுகின்றன.

அச்செடுத்த படங்களென்றால் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ரகசிய எண் தேவையில்லை. உறவுகள் கூடும் விழாக்களில் நிழற்படத் தொகுப்புகளைப் பார்த்தால், ஒவ்வொருவரும் அதில் ஒன்றிக்கொள்ளலாம். படம் எடுக்கப்பட்ட சூழல், அப்போது நடந்த களேபரங்கள், தவிப்புகள், பேசிய வார்த்தைகள், அனைத்தும் சங்கமிக்கும் அப்பொழுதில் உற்சாகத்துக்கு குறைவிருக்காது.

மகனுக்குப் பின்னால் அம்மா
மகனுக்குப் பின்னால் அம்மா

கதை பேசும் நிழற்படங்கள்

சிக்மண்ட் பிராய்ட் வீட்டுக்குள் நடந்தபோது, எண்ணற்ற நிழற்படங்களைப் பார்த்தேன். 1866-ல் அப்பாவுக்கு அருகில் நிற்கும் சிக்மண்ட் பிராய்ட்; 1886-ல் சிக்மண்ட் பிராய்ட் மற்றும் மார்த்தா திருமணம்; 1900-ல் சேர்ந்து நிற்கும் எர்னஸ்ட், ஜான் மார்டின் மற்றும் ஆலிவர் எனும் பிராய்டின் 3 மகன்கள்; ஜுன் 05, 1938-ல் சிக்மண்ட் பிராய்ட் பாரிஸ் வந்தது, 1938 செப்டம்பர் மாதம் லண்டன், எஸ்பிலனாதே விடுதிக்கு (Esplanade Hotel) முன்பாக பிராய்ட் நின்றது, 1970-ல் அன்னாவும் பவுலாவும் அமர்ந்திருப்பது உள்ளிட்ட படங்களைப் பார்த்தேன். மனைவி மார்த்தா மற்றும் மனைவியின் தங்கை மின்னா இருவருடன் பிராய்ட் 1905-ல் ஆஸ்டிரியாவில் படம் எடுத்தபோது,  பின்னால் தூரத்தில் நம் ஊர் அம்மாக்கள் போலவே, பிராய்டின் அம்மா நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வியன்னா வீட்டை பல்வேறு படங்களில் பார்க்க முடிந்தது. காரணம், வியன்னாவில் வாழ்ந்தபோது, பிராய்டின் அறையை நாஜிக்கள் கண்டுபிடித்துவிட்டால் அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்று பயந்த அவரின் நண்பர் அகஸ்ட் (August Aichhorn) அனைத்தையும் ஆவணமாக்க விரும்பினார். பிராய்ட் வேலை செய்யும் முறை, அவரது அறை, பணி சூழல் அனைத்தையும் படமெடுக்க எட்மண்ட் (Edmund Engelman) என்னும் நிழற்படக் கலைஞரை நியமித்தார். 

பிராய்டின் தலைமுறை
பிராய்டின் தலைமுறை

பிராய்டின் தலைமுறையை ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள். பிராய்ட், அவரது பெற்றோர், சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணைவர்கள், பேரப்பிள்ளைகள் அனைவரின் படங்களும் உள்ளன. அன்னா திருமணம் செய்துகொள்ளவில்லை. பிராய்டின் வாரிசுகளில், அன்னா மற்றும் பேரன் எர்னஸ்ட் மட்டுமே உளப்பகுப்பாய்வு சார் உளவியல் துறையைத் தேர்வு செய்ததையும், மற்றவர்கள் வெவ்வேறு துறைகளில் சாதிப்பதையும் அறிந்தேன்.

பிராய்டின் வாழ்வில் நாய்களுக்கும் முக்கிய இடம் இருந்ததை படங்களில் பார்த்தேன். முதல் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழலில், அன்னாவைக் காப்பாற்ற, அல்சேசியன் நாயை பிராய்ட் வாங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வேறு சில நாய்களும் வாங்கினார். 1937-இல் ஜோஃபி என்ற நாய் இறந்தபோது, “ஏழாண்டு பிணைப்பை ஒருவராலும் அவ்வளவு எளிதில் கடந்துவிட இயலாது” என்றார் பிராய்ட். ஒவ்வோர் ஆண்டும் பிராய்டின் பிறந்த நாளில், நாய் குறித்து கவிதை எழுதி பரிசளித்தார் அன்னா.

அருங்காட்சியகம் முழுவதும் பொன்மொழிகள் உள்ளன.  குறிப்பாக, கனவுகளின் விளக்கம் என்கிற அவருடைய புத்தகத்திலிருந்து நிறைய குறிப்புகளை வைத்திருக்கிறார்கள்.

மாறிய நகரம் - மாறாத அறை

பிராய்டின் அறையில், அவர் பயன்படுத்திய மேசை, நாற்காலி, விரிப்புகள், படங்கள், பழங்கால பொருட்கள், சேகரித்த சிற்பங்கள், மற்றும் உளப்பகுப்பாய்வு அமர்வுக்கான சாய்வு இருக்கை (psychoanalytic couch) அனைத்தும் உள்ளன. வியன்னாவில் இருந்தது போலவே லண்டனிலும் ஒழுங்கு செய்துள்ளார்கள். உயிரியல், உளவியல், தொல்லியல், கலை, இலக்கியம் சார்ந்து தீவிர வாசிப்பாளராக இருந்த பிராய்ட், வியன்னாவில் இருந்து புறப்படும் முன்பாக 800க்கும் மேற்பட்ட புத்தகங்களை விற்றுவிட்டார். இருப்பினும், 1600 தலைப்பிலான புத்தகங்களை லண்டனுக்கு கொண்டுவந்தார். அவருடைய அறையில் அனைத்தையும் பார்த்தேன்.

பிராய்டின் அறையில்
பிராய்டின் அறையில்

சில அடி தூரத்தில் உள்ள மற்றோர் அறைக்குள் நுழைந்தேன். வாய் புற்று நோயால் கொடுந் துயருற்று, வயோதிகத்தால் மாடிப் படிகள் ஏற முடியாத நிலையில் இந்த அறையில்தான் பிராய்ட் கிடத்தப்பட்டிருந்தார்.  1939, செப்டம்பர் 23-ம் தேதி அதிகாலையில் மார்ஃபின் (Morphine) ஊசி செலுத்தப்பட்டது. குடும்பத்தினரும் மருத்துவரும் சூழ, பிராய்ட் 83 வயதில் மரணமடைந்தார். அவர் உயிர்விட்ட, சாய்வு இருக்கை முந்தைய அறையில் இருப்பதை அறிந்து, மறுபடியும் சென்று பார்த்தேன்.

சிகிச்சைக்கான சாய்வு இருக்கை

உளப்பகுப்பாய்வு சிகிச்சைக்காக பிராய்ட் பயன்படுத்திய சாய்வு இருக்கையில் கலைநுட்பம் மிகுந்த காஷ்காய் விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. லண்டனில் செயல்படும், ஈரானிய மக்களின் கல்வி மற்றும் வழிகாட்டலுக்கான அமைப்பினர் இந்த விரிப்பை ஆய்வு செய்தார்கள்.

உளப்பகுப்பாய்வு இருக்கை மற்றும் விரிப்பு
உளப்பகுப்பாய்வு இருக்கை மற்றும் விரிப்பு

“ஈரான் நாட்டின் மேற்குத் திசையில் இருக்கும் காஷ்காய் (Qashqa’i) கூட்டமைப்பில் உள்ள ஓர் இனக் குழுவினரால், 19-ம் நூற்றாண்டின் கடைசியில் நெய்யப்பட்ட விரிப்பு இது. இதற்கான நிறம், மலர்களிலிருந்தும் செடிகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. நாடோடிகளின் வாழ்விடங்களில் இருந்த விலங்குகள், காட்சிகள், மலர்கள் மற்றும் அருகிலிருந்த கிராமங்கள் மற்றும் நகரங்களின் தாக்கங்கள் இதில் உள்ளன. ஈரானில் இதுபோன்ன காஷ்காய் விரிப்புகள் அதிகம் இருப்பதால், பார்த்தவுடன் சாதாரண காஷ்காய் விரிப்புபோல தோன்றலாம்.

ஆனால், இதில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. திருமணத்தின்போது வரதட்சணையில் ஒரு பகுதியாகவும் மற்றும் முக்கிய நிகழ்வுகளிலும் இவ்வகை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மலர்கள் நிறைந்த தோட்டத்தில் பெர்சியன் விரிப்புகள் போர்த்தப்பட்ட கட்டில்களில் அமர்ந்து கதை கேட்ட, பெரியவர்களின் அறிவுரைகளுக்கு செவிமடுத்த எங்களின் குழந்தைப்பருவ கோடைக்காலத்தை இந்த விரிப்பு நினைவூட்டுகிறது” என்றார்கள்.

அன்னாவின் ஷு
அன்னாவின் ஷு

அன்னா பிராய்ட்

அன்னா பிராய்டின் வாழ்வையும் காட்சிப் படுத்தியுள்ளார்கள். பெரிய கண்ணாடி அலமாரியில் அன்னா பயன்படுத்திய புத்தகங்கள், கை பை, பரிசு பொருட்கள், படங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் உள்ளன. அன்னாவின் ஷு ஒரு மேசை மீது இருக்கிறது. பெரியவர்களுக்கும் உளவியல் சிகிச்சை அளித்த அன்னா, அதற்காக பயன்படுத்திய கட்டிலைப் பார்த்தேன். அன்னாவின் மேசையில், தட்டச்சு இயந்திரம், தொலைபேசி, தொய்வை முத்திரை, எழுது பொருட்கள், கத்தரிக்கோல் உள்ளிட்டவை உள்ளன. மேசைக்கு ஒரு கதை இருக்கிறது.

அன்னாவின் பொருட்கள்
அன்னாவின் பொருட்கள்

சமாதான மேசை

1913-ம் ஆண்டு கோடைக்காலம். இத்தாலியின் மெரானோ (Merano) நகரத்துக்கு 8 மாதங்கள் அன்னாவை அனுப்பினார் பிராய்ட். தன் எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்கவும், சில இடங்களைச் சுற்றிப் பார்த்து அறிவை விசாலப்படுத்தவும் அன்னாவுக்கு இது உதவும் என பிராய்ட் நம்பினார். அதே காலகட்டத்தில், அன்னாவின் அக்கா சோபியாவுக்கு திருமண ஏற்பாடு தொடங்கியது. திருமணத்தில் பங்கேற்க அன்னா விரும்பினார். பிராய்ட் அனுமதிக்கவில்லை. ஆனாலும், மகளைத் தேற்றுவதற்காக, இந்த மேசையை வாங்கிக் கொடுத்தார்.

சமாதான மேசை
சமாதான மேசை

விழிகளின் அருகினில் நம்பிக்கை

பலரின் முகங்களை பலகையின் மேல் ஓரத்தில் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கண் மட்டுமே விழித்திருந்தது. அதன் கீழே, கண்களில் கருவி மாட்டிய குழந்தைகளின் படம் இருக்கிறது. வாசித்தேன். ’இரண்டாம் உலகப் போரில் மனதளவில் பேரதிர்ச்சி (Trauma) அடைந்த குழந்தைகளை இயல்புக்கு கொண்டுவர அன்னாவும் அவரது நண்பர்களும் பள்ளிக்கூடம் நடத்தினார்கள் (Hampstead Nurseries) அதில், 200க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து வழிநடத்தினார்கள். அதை நினைவுகூர, அன்னாவின் அறையில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ‘கண் படங்கள்’ வைக்கப்பட்டுள்ளன.’

குழந்தைகளுக்கு விளையாட்டு

இரண்டாம் உலகப் போரின்போது, குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மையம் ஒன்றையும் அன்னா உருவாக்கியிருந்தார் (The Anna Freud National Center for Children and Families). குழந்தைகளின் குடில் (Toddler Hut) என்று அழைக்கப்பட்டது. விளையாட்டு வழியாக, குழந்தைகளைக் கண்காணித்து வழிநடத்தினார்கள். கட்டிட உட்புற வடிவமைப்பு (interior architect) படித்த 3-ம் ஆண்டு மாணவர்கள் 12 பேர் சேர்ந்து, குழந்தைகளின் குடிலையும், அதில் பயன்டுத்தப்பட்ட பொருட்களையும் செய்து காட்சியகத்தில் வைத்திருப்பதைப் பார்த்தேன்.

குழந்தைகளின் குடில்
குழந்தைகளின் குடில்

உங்களை உங்களுக்குப் பிடிக்குமா?

முன்பொருமுறை, அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தொடர் வகுப்புகளில் 12-ம் வகுப்பு மாணவர்கள் (South Hampstead High School) பங்கேற்றார்கள். அருங்காட்சியகத்துக்கு எவ்வகையிலாவது நன்றி சொல்ல விரும்பினார்கள். “அழகு, உயரம், குட்டை, குண்டு, ஒல்லி, முகப்பரு, தொப்பை, வழுக்கை என மனித உடல் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களைப் பரப்புகின்றன. இதைப் பார்த்து, நமக்கே நம் உடலை பிடிக்காமல் போய்விடுகிறது. தன்னம்பிக்கை சிதைகிறது. இக்கருத்துக்கு எதிராக, ஒவ்வொருவரின் உடலும் இயல்பாக எப்படி இருக்கிறதோ அதை வரைந்து கொடுத்தார்கள். குறையுள்ளதாக உங்கள் உடலை நினைக்காமல், அதை கொண்டாடுங்கள். உங்கள் உடலைக் குறித்து பெருமைப்படுவதே புத்தாண்டு குறிக்கோளாக இருக்கட்டும். உங்களுக்கு நீங்களே, நிறைவுள்ளவராக இருப்பீர்கள் தானே?” என கேட்கிறார்கள்.

உங்கள் உடலை நேசியுங்கள்
உங்கள் உடலை நேசியுங்கள்

வீட்டின் மேலும் கீழும் நான்  நடந்தபோது, அருங்காட்சியக உணர்வே என்னில் எழவில்லை. பிராய்டும் அவரது குடும்பத்தினரும் இப்போதும் வாழ்கிற உணர்வே எழுந்தது. ஒவ்வோர் அறையையும் அவர்கள் வைத்திருந்த விதம், அத்தகைய உணர்வைத் தரவில்லையென்றால்தான் ஆச்சரியம்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in