சிறகை விரி உலகை அறி - 90: இறந்தவர்கள் உயிருடன் இருந்தபோது..!

அரசி விக்டோரியா கட்டிய பக்கிங்காம் முகப்பு
அரசி விக்டோரியா கட்டிய பக்கிங்காம் முகப்பு

வீடு என்பது வெறும் வார்த்தையல்ல! பலருக்கு, வீடு ஒரு பெருங்கனவு! சிலருக்கு, கனவு வீடு அமைப்பது பேரழகு!; சிலர் வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறார்கள்! வீட்டை விட்டுக் கிளம்ப சிலர் எதிர்பாத்திருக்கிறார்கள்!; நின்று தின்கிற வீடுகளுக்கு மத்தியில் சிக்கனச் செலவில் மிளிர்கின்றன சில வீடுகள்; எளிதில் வீடு மாற்றுகிறவர்கள் இருக்கும் ஊரில், வாழும் காலம் வரை வீட்டைப் பிரிய மனமில்லாதவர்களும் வாழ்கிறார்கள்! இந்த குணாதிசயங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு வீட்டைப் பார்க்கச் சென்றேன்.

பக்கிங்காம் வீடு

சர்ச்சில் போர் கூடத்தின் எதிரில் அமைந்துள்ளது பக்கிங்காம் அரண்மனை. இரண்டுக்கும் இடையே செய்ன்ட் ஜேம்ஸ் பூங்கா. பூங்காவின் மத்தியில் நீர் நிறைந்த ஏரி. அரண்மனையைப் பார்க்க, பூங்காவைச் சுற்றி மரங்களின் நிழலில் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

1819-ல் பக்கிங்காம் வீடு
1819-ல் பக்கிங்காம் வீடு

பயணிகளைக் காக்க சூரியனை மறைக்க விரும்பின மரங்கள். மழை மேகங்களே மறைத்துவிட்டதால் பேரமைதி காத்தன. கடந்த நாள்களில் பெய்த மழையில் குளித்த நிலம் சூரியனால் இன்னும் துவட்டப்படவில்லை. சேறாகாத ஈர தரையில் மற்றவர்களுடன் ஒருசேர நடந்தேன். அரண்மனைக்கு முன் சென்றேன். சூரியன் தெரியாத வெளிச்சத்தில் அரண்மனையின் பிரமாண்டத்தை ரசித்தேன்.

அரண்மனையின் குறிப்பிட்ட 19 அறைகளை மட்டும் சுற்றிக்காட்ட சுற்றுலா குழுக்கள் பல உள்ளன. கோடைக்காலத்தில், ஜுலை முதல் அக்டோபர் வரை  பார்க்கலாம். கட்டணம் குறைவு. குளிர் காலம் மற்றும் இளவேனிற் காலத்தில் சென்றால், ஒரேயொரு சுற்றுலா குழு மட்டுமே உண்டு. அதுவும், அரண்மனை ஏற்பாடு செய்துள்ள சுற்றுலா. ஒப்பீட்டளவில் கட்டணம் மூன்று மடங்கு அதிகம். குளிர்காலத்தில் நான் சென்றிருந்தேன். இனிமேலும் செல்வேனா என்பது நிச்சயமில்லை என்பதால், முன்பதிவு செய்திருந்தேன். மதியம் 01.30க்கு சுற்றுலா தொடங்கும். இன்னும் நேரம் இருக்கிறது. அதுவரை, அரண்மனையின் வரலாற்றைச் சொல்கிறேன்.

1846-ல் பக்கிங்காம் அரண்மனை
1846-ல் பக்கிங்காம் அரண்மனை

ஒரு வீடு அரண்மனையாகிறது!

பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் நிர்வாகத் தலைமையகமாக விளங்கும் பக்கிங்காம் அரண்மனையின் ஆரம்ப காலம், ஒரு நதியின் தொடக்கம்போல அமைதி நிறைந்தது. 18-ஆம் நூற்றாண்டில் செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனைதான் அதிகாரப்பூர்வ அரசவையாக திகழ்ந்தது. அரண்மனையில் போதிய இடம் இல்லாததால், அரசர் மூன்றாம் ஜார்ஜ் (ஆட்சிக்காலம் 1760-1820), தம் மனைவி சார்லோத்தே-க்காக ஓர் இடம் தேடினார். அரண்மனைக்கு அருகில் இருந்த பிரபு பக்கிங்காமின் வீட்டை விலைக்கு வாங்கினார். அமைதியும் எளிமையும் சூழ்ந்த வீட்டை, “இது, அரண்மனைக்கான இடம் அல்ல. தியானம் செய்வதற்கான இடம்” என்று சொன்னார். அரசருக்கும் அரசிக்கும் தனிப்பட்ட இல்லமாகவும், விருந்தினர்களை வரவேற்கும் இடமாகவும் பக்கிங்காம் விளங்கியது.

அரசர் மூன்றாம் ஜார்ஜ் - அரசி சார்லோத்தே
அரசர் மூன்றாம் ஜார்ஜ் - அரசி சார்லோத்தே

தந்தைக்குப் பிறகு, நான்காம் ஜார்ஜ் (ஆட்சிக்காலம் 1820-1830) ஆட்சிக்கு வந்தார். தனக்குப் பிடித்த, கட்டிட வடிவமைப்பாளர் ஜான் நாஷ் (John Nash) என்பவரை அழைத்தார். பக்கிங்காம் வீட்டை, பெரும் அரண்மனையாக மாற்றும் பொறுப்பை அளித்தார். கலை சேகரிப்புகளைக் காட்சிப்படுத்த, ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தையும், பெருமையையும் விளக்க நாஷ் கவனம் செலுத்தினார். ’ப’ வடிவில் கட்டிடம் எழுந்தது. அரண்மனையின் முகப்பில், பிரிட்டிஷ் கடற்படை மற்றும் இராணுவத்தின் அண்மைக்கால வெற்றியின் நினைவாக மார்பிள் கல்லால் நினைவு வளைவு எழுப்பினார். பார்ப்பதற்கு, ‘ப்’ வடிவில் இருந்தது அரண்மனை. செலவு கை மீறி சென்றது. வேலை முழுமையடையாமல், வெள்ளை யானைபோல நிற்கும் நிலை ஏற்பட்டது. நாஷ் தண்டிக்கப்பட்டார். அரசர் இறக்கும் வரை, வேலை நிறைவடையவே இல்லை.

அரசர் நான்காம் ஜார்ஜ்
அரசர் நான்காம் ஜார்ஜ்

அடுத்து, நான்காம் வில்லியம் (ஆட்சிக்காலம் 1830-1837) ஆட்சிக்கு வந்தார். வாழ்வின் பெரும்பகுதி கடற்படை அதிகாரியாக இருந்தவருக்கு, பக்கிங்காம் அரண்மனையின் மீது ஈர்ப்பு இல்லை. செல்ல மறுத்தார். செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அருகில் இருந்த கிளாரன்ஸ் வீட்டில் தங்கினார்.

செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனை
செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனை

புறக்கணிக்கப்பட்டதை நேசித்த அரசி

அரசி விக்டோரியா (ஆட்சிக்காலம் 1837-1901) அரியணை ஏறினார். இளமை காலத்தில், கென்சிங்டன் (Kensington) அரண்மனையில் மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வளர்ந்த அரசிக்கு, பக்கிங்காம் அரண்மனை மிகவும் பிடித்தது. திறந்தவெளி சாக்கடை மீது புதிய அரண்மனையின் வரவேற்பு அறைகள் கட்டப்பட்டுள்ளது குறித்தோ, சமையல்கூடம் பாழடைந்து இருண்டு கிடப்பது பற்றியோ, அரண்மனையை ஆய்வு செய்தவர்கள், ’துர்நாற்றம் மிகுந்த இடம்’ என்று சொன்னதையோ அரசி விக்டோரியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அரசி விக்டோரியா
அரசி விக்டோரியா

அவரைப் பொறுத்தவரையில், வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்பார்த்திருந்த சுதந்திரம் இங்கே கிடைத்தது. தனக்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காத பல்வேறு காரியங்களைச் செய்ய முடிந்தது. பிரியமான டாஷ் எனும் நாய் ஓடி விளையாடுவதற்கு பெரிய தோட்டம் இருந்தது. இசைக் கச்சேரி, விளையாட்டு, விருந்து, கேளிக்கை என மகிழ்ந்திருந்தார் அரசி. மெழுகுதிரி வெளிச்சத்தில் அரண்மனை ஒளிர்ந்தது. அறைகளை மூடிய புகை நாற்றம் அரசியின் மகிழ்ச்சியைத் தடுக்கவில்லை.

அரண்மனை பணியாளர்களிடம் ஒழுங்கோ ஒழுக்கமோ இல்லை. அரசியின் கணவர், இளவரசர் ஆல்பர்ட், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார். நிர்வாகத்தை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டு, ஊழல் அதிகாரிகளை வெளியேற்றினார். புதிய அதிகாரிகளையும் பணியாளர்களையும் நியமித்தார்.

அரசி விக்டோரியா கட்டிய பக்கிங்காம் முகப்பு
அரசி விக்டோரியா கட்டிய பக்கிங்காம் முகப்பு

விக்டோரியா – ஆல்பர்ட் தம்பதியருக்கு 9 குழந்தைகள் பிறந்தன. இடப் பற்றாக்குறையை அரசி உணர்ந்தார். ப வடிவ கட்டிடத்தின் 2 முனைகளையும் இணைத்து புதிய கட்டிடம் எழுந்தது. அதுதான், தற்போது நாம் பார்க்கும் அரண்மனை முகப்பு. ஏற்கெனவே, அங்கிருந்த நினைவு வளைவு, ஹைடு பார்க்கின் வடகிழக்கு மூலையில் ஆக்ஸ்போர்டு சாலை சந்திக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

புதுப்பொழிவடைந்த அரண்மனையில் இசை ஆர்வமிக்க இளவரசரும் அரசியும் மகிழ்ந்து கழித்தனர். ஆனால், டைபாய்டு காய்ச்சலால் இளவரசர் ஆல்பர்ட் இறந்த பிறகு, கொண்டாட்டங்கள் மறைந்தன. அரண்மனைக்கு வருவதையே அரசி பெருமளவு தவிர்த்தார். அரண்மனையில் மீண்டும் தூசி படிந்தது.

மறுபடியும் ஒளிர்ந்த அரண்மனை

அரண்மனை இருண்டு பாழடைந்து நசநசத்து கிடந்தபோது, ஏழாம் எட்வர்ட் அரசரானார் (ஆட்சிக்காலம் 1901-1910). முடியாட்சிக்கு என தனித்த அடையாளம் வேண்டும்; என்றென்றும் மக்களுக்கும், பக்கிங்காம் அரண்மனை மற்றும் அரச குடும்பத்துக்கும்  இடையே பிணைப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தார். அரண்மனையை புதிய வண்ணங்களுடனும், அழகிய தோரணங்களுடனும் அலங்கரிப்பது ’கடமையும் அவசியமும்’ என்றார். விருந்தினர்களுக்கு கழிவறைகள், குளியலறையில் சுடு தண்ணீர் வசதி ஏற்படுத்தினார். சுவையற்ற மதிய நேர அரசவையை நிறுத்தினார். அரசவை மாலையில் கூடியது. விருந்திலும், நடன நிகழ்வுகளிலும் அரசரும், அரசியும் பங்கேற்றார்கள்.

அரசர் ஏழாம் எட்வர்ட்
அரசர் ஏழாம் எட்வர்ட்

முதல் உலகப் போர்

அடுத்ததாக, ஐந்தாம் ஜார்ஜ் (ஆட்சிக்காலம் 1910-1936) அரசரானார். குடும்ப அரண்மனையை விட்டுவிட்டு, அரசி மேரியுடன் பக்கிங்காமில் குடியேறினார். அரண்மனையில் நவீன வசதிகள் வந்திருந்தாலும், புழக்கத்துக்கு சரியாக இல்லை. ’எல்லாம் தூரந் தூரமாக உள்ளது. அந்த தூரமே களைப்பைத் தருகிறது’ என்று கடிதம் எழுதினார். அரண்மனையில் புனரமைப்பு தொடங்கியது. இதனிடையில், முதல் உலகப் போரும் ஆரம்பமானது. போர் குறித்த செய்தி வந்ததும், அரசரையும் அரசியையும் பார்க்க அரண்மனைக்கு முன்னால் மக்கள் ஒன்று கூடினார்கள். முதன் முறையாக அச்சம் நீக்கக் கூடிய இடமாகவும் தேச ஒற்றுமையின் குறியீடாகவும் பக்கிங்காம் மாறியது.

அரண்மனையின் முகப்பு, மகிழ்ச்சியின் அடையாளமாக மட்டுமல்ல புரட்சியின் அடையாளமாக  விளங்கிய வரலாறும் உண்டு. வாக்குரிமை கேட்டு, 1914-இல் எமலின் பங்ரஸ்ட் (Emmeline Pankhurst) தலைமையில் 20 ஆயிரம் பெண்கள் இங்கே ஒன்றுகூடி போராடினார்கள். பெண் ஒருவர், காலவர்களையும் மீறி அரண்மனைக்குள் நுழைந்தார். அரசருக்கு முன்னால் சென்று, “பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துக” என்று முழங்கினார்.

இரண்டாம் உலகப் போர்

அரசர் ஆறாம் ஜார்ஜ் (ஆட்சிக்காலம் 1936-1952) பக்கிங்காமில் குடியேறினார். 1936-ல் தொலைக்காட்சி வைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் எல்லாம் மாறியது. அரண்மனையை விட்டு வெளியேறினார்கள். கலை சேகரங்களை பெட்டி கட்டி வேறு இடத்துக்கு மாற்றினார்கள். அரண்மனையில் 9 முறை குண்டு விழுந்தாலும், பெரிய பாதிப்பு இல்லை.

போருக்குப் பிறகு, அரசர் மறுபடியும் பக்கிங்காமில் தங்கினார். நோயுற்றபோது, 1951-இல் முதல் தளத்தில் அரசருக்கு நுரையீரல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. பென்சிலால் எழுதப்பட்ட குறிப்புகளை வாயிலில் கட்டினார்கள். மக்கள் வாசித்து அரசரின் நிலையை அறிந்தார்கள். 1952-ல் அரசர் இறந்தார். மகள் எலிசபெத், இரண்டாம் எலிசபெத் எனும் பெயருடன் அரசியானார். பக்கிங்காமில் தங்கி 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

நம் காலத்து அரசி

அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் இரண்டாம் பிலிப் இருவரும் வார இறுதி நாட்களை விண்ட்சர் கோட்டையிலும் (Windsor Castle) கோடைக்காலத்தை பால்மோரல் கோட்டையிலும் (Balmoral Castle) செலவிட்டனர். சாண்ட்ரிங்ஹாம் வீட்டில் (Sandringham) கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடினர். 

நான் சென்றபோது அரசியும் இளவரசரும் உயிருடன் இருந்தனர். சாண்ட்ரிங்ஹாம் சென்றிருந்தனர். இளவரசர் இரண்டாம் பிலிப், 09 ஏப்ரல் 2021-இல் மறைந்தார். அரசி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 08, 2022-ல் இறந்தார். தற்போது, மூன்றாம் சார்லஸ் அரசராக உள்ளார்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in