சிறகை விரி உலகை அறி - 83: ரோமானியக் குளங்கள்

பெரிய குளம்
பெரிய குளம்

விரதமிருந்து குளிப்பது, விரகதாபம் தணிய குளிப்பது, விரக்தியில் குளிப்பது, விரல்கள் உப்ப குளிப்பது, தூக்கம் வர குளிப்பது, துக்கம் தீர குளிப்பது.. என குளியல்களில் பல வகை உண்டு.

ஸ்டோன்ஹெஞ் பார்த்த விழிகளுடன், இடைவழிப் பேருந்தில் ஏறினோம். பேருந்து நிறுத்தம் சென்றோம். அருகிலேயே, சிற்றுண்டிக் கடையும் நினைவுப் பொருட்கள் வாங்குவதற்கான கடையும் இருக்கின்றன. ஹாட் சாக்லெட் குடித்தேன். மாதிரி ஸ்டோன்ஹெஞ் மற்றும் இங்கிலாந்து தொல்லியல்துறை வெளியிட்டுள்ள Stonehenge புத்தகம் வாங்கினேன்.

குளங்களை நோக்கியப் பயணம்

மறுபடியும் பேருந்தில் ஏறியதும், “உங்களுக்கு தினமும் குளிக்கப் பிடிக்குமா?” என்று கேட்டார் வழிகாட்டி. “என்ன?” என்பதுபோல தலையை நீட்டிப் பார்த்தோம்.

சிரித்துக்கொண்டே, “தினமும் குளிக்கும் வழக்கமெல்லாம் பழங்காலத்தில் இல்லை. குளிப்பதே இல்லை என்றும் சொல்லலாம். ஆனால், ரோமையர்கள் உடல் சுத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பழங்காலத்தில், ரோமை பேரரசரிடம், காட்டுமிராண்டிபோல திரிந்த ஒருவர் சென்று, “என்னது! தினமும் ஒருமுறை குளிக்கிறீர்களா?” என்று கேட்டாராம். அதற்கு பேரரசர், மன்னிப்பு கேட்கும் தொனியில், ‘வேலை நிறைய இருப்பதால், தினமும் இரண்டுமுறை குளிக்க முடியவில்லை ஐயா’ என்று சொன்னாராம்” என்றார் வழிகாட்டி. நாங்களும் சிரித்தோம்.

சிரிப்பினூடே, “இன்றைய நாளின் மூன்றாவது இடமாக, ரோமானியக் குளங்களைப் (The Roman Baths) பார்க்க பேத் (Bath) நகரத்துக்குப் போகிறோம். சற்று ஓய்வெடுங்கள்” என்றார். எங்களுக்குப் பின்னால் வரும் வானங்களை வரவேற்க ஓடும் மரங்களைப் பார்த்து நான் நேரம் போக்கினேன்.

புனித நீரூற்று கற்பனை ஓவியம்
புனித நீரூற்று கற்பனை ஓவியம்

புராதனக் கதை

வெந்நீர் ஊற்றுக்குப் புகழ்பெற்ற நகரம் பேத். நாங்கள் நுழைந்தபோதே மின் விளக்குகள் மஞ்சள் பற்களைக் காட்டிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்றைத் தழுவியபடி மழைக் கால்கள் நிலத்தைத் தொட்டன. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மெந்திப் (Mendip) மலையில் விழுந்த மழை நீர் கசிந்து  பூமிக்குள் நுழைந்து ஏறக்குறைய 2700 – 4300 மீட்டர் ஆழத்துக்குச் சென்றது. இயற்கையான சூட்டில் கொதித்தது. அழுத்தம் காரணமாக பூமியை உடைத்துக்கொண்டு வெளியே கொப்பளித்தது. இந்த வெந்நீர் ஊற்று குறித்த பழங்கால கதை ஒன்று இருக்கிறது.

இளவரசர் பிளாடுட்
இளவரசர் பிளாடுட்

அரசர் லுதுடிபிரஸ் (Ludhudibras) என்பவரின் மகன் இளவரசர் பிளாடுட் (Bladud). இளவசரைத் தொழுநோய் தாக்கியது. அரண்மனையில் இருந்து விரட்டப்பட்டார். தனியாக அலைந்து திரிந்தார். பன்றிகளை மேய்த்தார். ஒருநாள், பள்ளத்தாக்கில் ஆவி பறந்த சதுப்பு நிலத்தில் பன்றிகள் விழுந்தன. புரண்டு எழுந்தன. எழுந்தபோது, உடல்களில் இருந்த புண்களும் காயங்களும் மறைந்து போயின. ஆச்சர்யப்பட்ட இளவரசர், தனக்கும் சுகம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் செடி கொடிகளைத் தாண்டி, பள்ளத்தாக்கினுள் இறங்கினார். வெந்நீரில் நனைந்தார். முழுமையாக சுகம் பெற்றார். அரண்மனையிலும் அனுமதி கிடைத்தது. அந்நாளில் இருந்து, அதிசய வெந்நீர் ஊற்றைச் சுற்றி பாத் நகரம் வளர்ந்தது.

ரோமையரின் வருகை

காலங்கள் உருண்டோடின. பிரிட்டனை முழுமையாகக் கைப்பற்ற ரோமை படையினர் கி.மு. முதல் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு படையெடுத்தனர். அக்காலகட்டத்தில், இரும்பு யுகத்தைச் சேர்ந்த டொபுன்னி (Dobunni) இனக்குழுவின் கட்டுப்பாட்டில் பாத் இருந்தது. அம்மக்கள், வெந்நீர் ஊற்றை புனித இடமாக வழிபட்டனர். வெந்நீர் ஊற்று, குணமளிக்கும் பெண் கடவுளான சுலிஸ் (Sulis)-இன் இடம் என்றும், தங்களது சடங்குகள் வழியாக பாதாள உலகில் வாழும் அவருடன் நம்மால் உறவாட முடியும் என்றும் நம்பினர்.

குளியல் வளாக வரைபடம்
குளியல் வளாக வரைபடம்

ரோமை பேரரசர் கிளவுதியுஸ் (Claudius) கி.பி. 43-ல் பாத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தார். வெந்நீர் ஊற்று பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் சென்றது. பெண் கடவுள் சுலிஸிடம் சென்று மன்றாடவும், விழா கொண்டாடவும் முடியாமல் மக்கள் துயருற்றார்கள். தாங்கள் கைப்பற்றும் இடங்களில் உள்ள மக்களின் கடவுள்கள் மற்றும் பெண் கடவுள்கள் மீது கொஞ்சம் கரிசனை கொண்டிருந்த ரோமானியர்கள், வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்த இராணுவக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினார்கள். நகரம் தொடர்ந்து வளர்ந்தது. கி.பி.50 - கி.பி.60 காலகட்டத்தில் கலைஞர்களும், ஓய்வு பெற்ற வீரர்களும் பாத்தில் குடியேறினார்கள்.

வட்ட வடிவ குளம்
வட்ட வடிவ குளம்

கலகங்களும் அழிவும்

கி.பி. 60-க்குப் பிறகு ரோமை பேரரசர் மற்றும் இங்கிலாந்து ராணி பௌடிகா (Boudica) இருவருக்குமிடையே கலகம் மூண்டது. ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கட்டிடங்கள் தரைமட்டமாகின. போர் முடிந்தாலும், சிதைந்த கட்டிடங்கள், எழுந்த அரசியல் சிக்கல்கள், நிகழ்ந்த உளவியல் தாக்கங்களைச் சரி செய்ய 10 ஆண்டுகளுக்கும் மேலானது. சமாதான முயற்சியாக, மறுபடிம் பல்வேறு கட்டுமான முன்னெடுப்புகளை ரோமை பேரரசர் மேற்கொண்டார். அதில், முக்கியமானது, குணமளிக்கும் பெண் கடவுள் சுலிஸின் வெந்நீர் ஊற்றை புகழ்மிக்க இடமாக மாற்றுவது மற்றும் கோவில் கட்டுவது.

பொறியியல் சாதனை

ஏறக்குறைய 100° செல்சியஸ் சூட்டில் 43 தாதுக்களுடன் பொங்கி ஊற்றும் வெந்நீரைச் சுற்றி குளம் அமைப்பது எளிதான செயல் அல்லவே! சதுப்புநிலத்தைச் செம்மைப்படுத்தி 2 மீட்டர் உயரத்துக்கு சுவர் எழுப்பினார்கள். புனித வெந்நீர் பொங்கி வரும் இடத்தில் மக்கள் குளிக்கவில்லை. மாறாக, காணிக்கைகளை வீசினார்கள். பெண் கடவுளிடம் தங்கள் விண்ணப்பங்களை எழுப்பினார்கள்.

ரோமானியக் குளங்களின் வளாகம்
ரோமானியக் குளங்களின் வளாகம்

ரோமானியர்கள், வெந்நீர் ஊற்றைச் சுற்றி குளியல் வளாகம் கட்டினார்கள். குணமளிக்கும் நீரூற்றில் இருந்து குழாய் வழியாக அருகிலுள்ள குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு சென்றார்கள். மண் ஓடுகளாலும், உள்ளூர் மரங்கள், அவோன் ஆற்றுப் படுகையில் இருந்து கற்கள், மெந்திப் மலைச் சுரங்கங்களில் இருந்து காரீய டைல்ஸ் ஆகியவற்றால் வளாகத்தை அழகுபடுத்தினார்கள்.

நீரூற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கொதிக்கும் நீரை குழாயில் கொண்டு சென்ற அவர்களின் பொறியியல் நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது.

குளியல் வளாக வரைபடம்
குளியல் வளாக வரைபடம்

பாத் நகரத்தில் தமிழ்

குளியல் வளாகத்துக்குள் நாங்கள் சென்றதும், எங்களுக்கான நுழைவுச் சீட்டை வழிகாட்டி வாங்கினார். முக்கிய தகவல்களுடன் பல்வேறு மொழிகளில் தாள்கள் அங்கிருந்தன. ‘ரோமானிய குளங்களைப் பார்வையிடுதல்’ என்றும் தலைப்பில் தமிழில் இருந்ததைப் பார்த்து வியந்தேன்.

வளைவான பாதைகளைக் கடந்து கீழே சென்றபோது, அகழாய்வில் கிடைத்த கல்வெட்டைப் பார்த்தேன். அதில், ‘கி.பி. 76, பேரரசர் வெஸ்பாசியன் ஆட்சியின் 7-வது ஆண்டின்போது’ என்று எழுதப்பட்டிருந்தது. எனவே, குளியல் வளாகம் கி.பி.76-ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

கீழே சென்றதும் செவ்வக வடிவிலான பெரிய குளம் (Great Bath) கண்ணில் பட்டது. இதன் ஆழம் 1.5 மீட்டர். வெந்நீர் குளிர்ந்துவிடக்கூடாது என்பதற்காக காரீய டைல்ஸ் 45 பதித்துள்ளார்கள். அவை இப்போதும் இருக்கின்றன. பாறைக் கற்கள் பதிக்கப்பட்ட அகலமான நடைபாதை குளத்தைச் சுற்றிலும் இருக்கின்றன. பாதி குளித்துவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற சிலைகள் இருக்கின்றன. நீரில் கால் நனைத்தேன். நனைந்திருந்த கற்களில் அமர்ந்து படமெடுத்தேன்.

கிழக்கே இருந்த மற்றொரு குளத்துக்கு, பெரிய குளத்திலிருந்து வெந்நீர் சென்றிருக்கிறது. மேற்கே இருந்த வட்ட வடிவ குளத்தில் குளிர்ந்த நீர் இருந்துள்ளது.

வெப்ப குளியலறை
வெப்ப குளியலறை

குளிக்கும் நடைமுறை

குளியலை சடங்காக அல்லாமல் கொண்டாட்டமாகச் செய்தார்கள் ரோமையர்கள். குளிப்பதற்கென்றே தனி நடைமுறை வைத்திருந்தார்கள்.

(1) அறையில் (apodyterium) மெல்லிய ஆடைக்கு மாறுவது.

(2) சற்று வெதுவெதுப்பான (tepidarium) அறையில் உடலை இளகுவாக்குவது.

(3) சூடான அறைக்குச் செல்வது (Caldarium).

(4) ஆழமில்லா வெதுவெதுப்பான குளத்தில் (Sudatoria) குளிப்பது.

(5) முக்குளித்து குளிக்கத்தக்க ஆழமிக்க சிறிய குளத்தில் (Balnea) குளிப்பது.

(6) குளிர்ந்த நீருள்ள நீந்தி குளிக்கத்தக்க பெரிய குளத்தில் (Natatio) குளித்து குளியலை நிறைவு செய்வது.

வழிகாட்டியுடன் சென்று, சூடான அறையைப் (Caldarium) பார்த்தேன். ஏறக்குறைய ஓரடி உயரத்தில் செங்கல் தூண்கள் பல நிற்கின்றன. அதன் மேலே இருந்த தளம் தற்போது இல்லை. அந்த அறைக்கு வெளியே விறகு எரித்து, வெப்பத்தை செங்கல் தூண்களுக்கு இடையே அனுப்பியுளார்கள். தரை சூடாகி அறை முழுவதும் வெப்பம் பரவும்போது, அங்கே படுத்து, வாசனை திரவியத்தால் மசாஜ் செய்திருக்கிறார்கள்.

பெரிய குளத்துக் கரையில்
பெரிய குளத்துக் கரையில்

சமூக நீதி விளங்கிய இடம்

மக்கள், பெரிய குளத்திலிருந்து தெறிக்கும் தண்ணீர் படாதவாறு சற்று தள்ளி அமர்ந்து வியாபாரம் பேசினார்கள்; உள்ளூர் அரசியலை விவாதித்தார்கள்; பலகையில் விளையாடினார்கள்; மெய்யியல் விவாதம் நடத்தினார்கள். குளிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த, பாடகர்களும் இசைக் கலைஞர்களும், மாயாஜாலம் செய்கிறவர்களும் இருந்தார்கள். நகம் வெட்டுவோர், அக்குள்களில் முடி பிடுங்குவோர், எஜமானர்களுக்கு பணிவிடை செய்த பணியாளர்கள் மற்றும் பொருட்களைத் தூக்கி வந்த அடிமைகள் இருந்தார்கள். பிரபுக்கள், ஏழைகள், பணக்காரர்கள், அடிமைகள் அனைவரும் ஒன்றாகவே குளித்தார்கள். குணமளிக்கும் நீர் என்பதால், மக்கள் கூட்டம் எப்போதும் இருந்தது.

தொடக்க காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில்தான்  குளித்தார்கள். கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஹேட்ரியடன் சட்டமியற்றி இம் முறையைத் தடுத்ததால்,  ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்தில் தனித்தனி இடங்களில் குளிக்கும்படி மாற்றி அமைத்தார்கள்.  

இப்போதும், வெந்நீர் ஊற்றிலிருந்து 46.5 ° செல்சியஸ் எனும் நிலையான வெப்பத்தில் 12,50,000 லிட்டர் தண்ணீர் தினமும் பாய்ந்தோடுகிறது.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in