
ஸ்கூட் ஏர்லைன்ஸின் அமிர்தசரஸ்-சிங்கப்பூர் விமானம் 30 பயணிகளை விட்டுச் சென்றது சர்ச்சையாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு 7.55 மணிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸின் விமானம் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக 5 மணி நேரத்திற்கு முன்பாக அதாவது மாலை 3 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்று விட்டது. இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய 30 பயணிகள் அதில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டனர்.
அப்போது, விமானத்தின் நேரத்தை மாற்றுவது குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது என்றும், அதை சரிபார்த்து விமான நிலையத்தை அடைந்த பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிறுவனம் தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்," 30 பயணிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த முகவர் சிங்கப்பூர் செல்லும் விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தெரிவிக்கவில்லை" என்றார்.
இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.