அன்று படுத்த படுக்கை; இன்று எழுந்து நடக்கிறார்: முதல்வரை சந்தித்து கண்கலங்கிய மாணவி சிந்து!

அன்று படுத்த படுக்கை; இன்று எழுந்து நடக்கிறார்: முதல்வரை சந்தித்து கண்கலங்கிய மாணவி சிந்து!

இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமடைந்த மாணவி சிந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சக்தி. தேநீர் வியாபாரியான இவரது மகள் சிந்து கடந்த 2020 டிசம்பரில் தனது தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதியும் முழுவதும் சேதம் அடைந்தது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துவுக்கு பத்துக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே அவர் இருந்து வந்தார்.

மேலும் ஆசிரியர்கள், தோழிகள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே படித்து அண்மையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இது குறித்து வெளியான செய்தியை தொடர்ந்து மாணவி சிந்துவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மாணவி சிந்து அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் சிந்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிந்துவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரது பெற்றோரிடம் சிந்துவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அப்போது உறுதி அளித்தார். தற்போது முழுமையாக மாணவி சிந்து குணமடைந்து விட்டார். அவர் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமடைந்த செல்வி சிந்து, முதல்வரை சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியமைக்காக நன்றி தெரிவித்தார்" என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in