
ஒன்றரை வயது சிறுவனின் உயிரைக் காக்க, ரூ17.5 கோடி மதிப்பிலான ஊசி மருந்தை பெற உதவுமாறு பிரதமர் மோடிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்த மவுரியா என்னும் ஒன்றரை வயது சிறுவன் ’ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ என்னும் மரபுவழி அரிய உடல்நல பாதிப்பால் அவதியுற்றுள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கும் ஊசி மருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை பெற வழியில்லாது சிறுவனின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
’ஜோல்ஜென்ஸ்மா’ என்னும் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஊசி மருந்தினை இதற்காக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த ஊசி மருந்தின் விலை ஒரு டோஸ் ரூ17.5 கோடி ஆகும். அவற்றை வாங்க வழியற்ற மவுரியாவின் குடும்பத்தினர் முதல்வர் சித்தராமையாவிடம் உதவி கோரியுள்ளனர். முதல்வரும் 2 காரணங்களின் அடிப்படையில், அந்த கோரிக்கையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மோடிக்கு சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், அரிய வகை மரபு நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் குழந்தையின் உயிர்காக்க இரண்டு வழிகளில் பிரதமரின் உதவியை கோரியுள்ளார். முதலாவது, ஜோல்ஜென்ஸ்மா மருந்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதின் மூலம், அதன் விலையை கணிசமாக குறைக்க முடியும்.
அடுத்தபடியாக பிரதமரின் பிரத்யேக நிதி சேகரிப்பான ’பிஎம் கேர்ஸ்’ மூலம், சிறுவனின் உயிர் காப்பதற்கான ஊசி மருந்தை வாங்குவதற்கான நிதி உதவியை வழங்க முடியும். குணப்படுத்தலில் உலகின் மிகவும் காஸ்ட்லியான மரபுவழி நோயுடன் போராடும் சிறுவனின் உயிர்காக்க உதவுமாறு, பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.