லாரி மீது பைக் மோதி எஸ்.ஐ பலி: இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது நடந்த துயரம்

ரங்கராஜ்
ரங்கராஜ்

பணி முடிந்து தனது   இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத திரும்பிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர்  பழுதடைந்து சாலை ஓரம் நின்ற லாரி மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் உட் கோட்டத்திற்கு உட்பட்ட எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ரங்கராஜ் (57). திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரங்கராஜ் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலில் எலச்சிப்பாளையம்  காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ராசிபுரம் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று  இரவு பணி முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ராசிபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்புக்கு  திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எலச்சிப்பாளையம் அடுத்த வையப்பமலை தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் ரங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில்  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக எலச்சிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர் விபத்தில் உயிரிழந்துள்ளது  காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in