துனிஷா தற்கொலைக்கு காரணம் ஷ்ரத்தா படுகொலை?

காதலனுடன் துனிஷா
காதலனுடன் துனிஷா

டிவி நடிகையான துனிஷா சர்மா தற்கொலைக்கு, டெல்லி ஷ்ரத்தா படுகொலை ஒரு வகையில் காரணமாகி இருப்பது, போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலிவுட் சினிமா மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் துனிஷா சர்மா. குழந்தை பிராயம் தொட்டே திரையில் பங்கேற்று வரும் துனிஷா, 2 தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளம் ஒன்றிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால் தற்கொலையை உறுதி செய்யும் வகையில் துனிஷா சார்பிலான குறிப்புகள் ஏதும் இல்லாததால், சந்தேக மரணம் என்ற கோணத்திலேயே காவல்துறை விசாரணை தொடர்ந்து வருகிறது. இதனிடையே துனிஷாவின் தாயார் அளித்த தகவலின்படி, ஷீஜன் கான் என்ற சக நடிகரை போலீஸார் கைது செய்தனர். துனிஷாவின் காதலராக அறியப்பட்ட ஷீஜன் கான், அண்மையில் தனது காதலை துண்டித்துக்கொண்டதே துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தற்போது போலீஸ் காவலில் இருக்கும் ஷீஜன் கான் புதிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதன்படி துனிஷா தற்கொலைக்கும், டெல்லியில் அண்மையில் அரங்கேறிய ஷ்ரத்தா படுகொலைக்கும் முடிச்சு போட்டுள்ளார்.

துனிஷா சர்மா
துனிஷா சர்மா

இந்து - முஸ்லிம் என இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஷ்ரத்தா - அப்தாப் ஜோடி. காதலர்களான இருவரும் டெல்லியில் சேர்ந்து வாழ்ந்தபோது ஷ்ரத்தாவின் படுகொலை நடந்தேறியது. ஷ்ரத்தாவை கொன்று துண்டமாக வெட்டியெறிந்த அப்தாபின் அரக்கத்தனத்தின் பின்னே ’லவ் ஜிஹாத்’ செயல்பாடுகள் இருப்பதாக சிலர் கிளப்பி விட்டனர். ஷ்ரத்தா மீதான அனுதாப அலையும் அந்த கூற்றுக்கு வலிமை சேர்த்தது.

இதன் மத்தில் இந்து - முஸ்லிம் மதங்களை சேர்ந்த துனிஷா - ஷீஜன் ஜோடிக்கும் சங்கடங்கள் எழுந்தனவாம். இருவேறு மதங்களை சேர்ந்த தாங்கள், வாழ்க்கையில் சேர்வதில் இருக்கும் சவால்கள் காரணமாக, காதலை துறந்து பிரியும் முடிவை தான் எடுத்ததாக ஷீஜன் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவால் துனிஷா மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளானதையும் ஷீஜன் உறுதி செய்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு சில தினங்கள் முன்பே ஒருமுறை அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், இது தொடர்பாக துனிஷாவிடமும் அவரது தாயாரிடமும் தான் பேசி சமாதானம் செய்ததாகவும் ஷீஜன் தெரிவித்துள்ளார். ஷீஜன் உடனான காவல் துறையினரின் தொடரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in