ரேபிடோ ஓட்டுநரான குறும்பட இயக்குநர்: பயணியின் பதிவால் கிடைத்திருக்கும் புதிய வெளிச்சம்!

ரேபிடோ ஓட்டுநரான குறும்பட இயக்குநர்: பயணியின் பதிவால் கிடைத்திருக்கும் புதிய வெளிச்சம்!
மாதிரிப் படம்

சில பயணங்களின்போது சாலைகளில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் புதிய திருப்பத்தைச் சந்திக்க நேரும். பெங்களூரு மாநகரில் ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணிபுரியும் விக்னேஷ் நாகபூஷணம் எனும் இளைஞரின் சமீபத்திய பயணம் அப்படியானதுதான்.

பெங்களூருவின் வீவொர்க் வணிக வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பராக் ஜெயின், சில நாட்களுக்கு முன்னர், தன் அலுவலகத்திலிருந்து வெளியில் செல்ல ரேபிடோ பைக் புக் செய்திருந்தார். அவரை அழைத்துச் செல்ல ரேபிடோ பைக் ஓட்டுநரான விக்னேஷ் நாகபூஷணம் வந்தார். இருவரும் கிளம்பிச் சென்றபோது வீவொர்க் வணிக வளாகம் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அதே வளாகத்தில் செயல்பட்டுவந்த நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணிபுரிந்ததாக விக்னேஷ் கூறியதைக் கேட்டு பராக் ஜெயின் ஆச்சரியமடைந்தார்.

மேலதிக விவரங்களைக் கேட்ட பராக் ஜெயினிடம் தனது கதையைப் பகிர்ந்துகொண்டார் விக்னேஷ். அந்த வளாகத்தில் இயங்கிவந்த சீன செயலி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்துவந்தவர் விக்னேஷ். 2020-ல் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் திடீரென அவர் வேலையிழந்தார். அந்தக் காலகட்டத்தில் கரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக வேறு வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை.

எனினும், தளர்ந்துவிடாத விக்னேஷ் சினிமா, குறும்படம் ஆகியவற்றின் மீது இயல்பாகவே கொண்டிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். தனது சேமிப்புத் தொகையை வைத்து ஒரு குறுந்தொடரையும் இயக்கினார். நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடர், 15 திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சில விருதுகளும் கிடைத்தன. ஓடிடி பக்கமும் செல்ல விரும்பிய அவர் பொருளாதாரப் பிரச்சினைகளால் அதைக் கைவிட்டார்.

என்னதான் கலைப் பயணம் என்றாலும் செலவு செய்துகொண்டே இருக்க முடியுமா? கையிருப்பு கரைந்ததும் கையறு நிலையில் தவித்தார். தனது பொருளாதாரச் சிக்கல் குறித்து தனது தாயிடம்கூட அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர்தான் ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார்.

விக்னேஷின் போராட்ட வாழ்க்கைக் கதையைக் கேட்டதும் அவர் மீது மிகுந்த பரிவு கொண்ட பராக் ஜெயின் அவரைப் பற்றிய தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டார். விக்னேஷின் விசிட்டிங் கார்டையும் படமெடுத்துப் பகிர்ந்திருந்தார். ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அந்த ட்வீட் இணையவாசிகள் பலரை இளக வைத்தது. 2,800-க்கும் மேற்பட்டோர் அதை லைக் செய்திருக்கினர், நூற்றுக்கணக்கானோர் அதை ரீட்வீட் செய்தனர்.

இதையடுத்து, விக்னேஷின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். ‘அவரது சொந்தக் கதையே ஒரு குறும்படத்துக்கான கதை தான்’ என ஒரு ட்விட்டர்வாசி எழுதியிருக்கிறார். வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in