‘மத நடுநிலை நாட்டிலா இவ்வளவு வெறுப்பு?’ - வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்: என்ன காரணம்?

‘மத நடுநிலை நாட்டிலா இவ்வளவு வெறுப்பு?’ - வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்: என்ன காரணம்?

‘இது 21-ம் நூற்றாண்டு. மதத்தின் பெயரால் எந்த இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம்? மத நடுநிலை நாடாக இருக்க வேண்டிய தேசத்தில் இப்படி நடப்பது வேதனை அளிக்கிறது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சுதந்திரமான, நம்பகமான, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களால் முஸ்லிம் சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகவும், அந்தத் தலைவர்கள் வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) உள்ளிட்ட கடுமையான சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஏதேனும் செய்யப்பட வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த கே.எம்.ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள் நடப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தது. ‘இது 21-ம் நூற்றாண்டு. நாம் மதத்தின் பெயரில் எந்த இடத்தை அடைந்திருக்கிறோம்? ஜனநாயக நாட்டில், மத நடுநிலை கொண்ட தேசத்தில் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்படுவது வேதனை அளிக்கிறது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in