மத்திய அரசு மின்சாரத் திருத்தச் சட்டத்தின்படி புதிய புதிய விதிகள் நடைமுறைப்படுத்தி வருவது பொதுமக்களிடையே மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விதிகளால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என விவரம் அறிந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே, ”மசோதா குறித்து யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது; இது மாநில சுயாட்சிக்கு எதிரானது” என எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கின. அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு, திருத்தப்பட்ட விதிகளை மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதன்படி 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் அதிக மின்பயன்பாட்டு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டப்படி, இந்த நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், அதிக மின் பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரத்தில் பயனாகும் மின்சாரத்துக்கு 5 விழுக்காடு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
’’ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது கடுமையான பொருளாதார தாக்குதலைத் தொடுக்கும் இந்த நடவடிக்கை பெரும் அநீதி என்றும், ஏற்கெனவே, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளது” என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
மின்சாரத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என நமது அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், “இந்த நேர நிர்ணயம் என்பது வீடுகளுக்குப் பொருந்தாது அதேசமயம், மின் துறையை ஒழுங்குப்படுத்தி அதை வெளிப்படைத்தன்மையோடு செயல்படவைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தியதும் புதிய மின் கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் மக்கள் தங்களது மின் பயன்பாட்டை திட்டமிட்டுக்கொள்ள முடியும் என்று மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சொல்கிறார்.
மத்திய அரசின் மின் திருத்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து தமிழக மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தியிடம் பேசினோம்.
“மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். இந்தியாவின் தற்போதைய மின் நிறுவுதிறன் 2023 ஜனவரியில் 411.64 ஜிகா வாட். இந்தியாவின் உச்சபட்ச மின் தேவை என்பது 2022 டிசம்பரில் 205.03 ஜிகா வாட். அதாவது, மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் மட்டுமே உச்சபட்ச தேவையாக உள்ளது. எஞ்சிய மின் உற்பத்தியை பயன்படுத்த தேவை இல்லாத நிலையில், உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே எழவில்லை.
அதிக மின் பயன்பாட்டு நேரத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத்தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசின் விதிகள் கூறுகின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது. அதிகபயன்பாட்டு நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு முன்பாக அலுவலகம் செல்ல ஆயத்தமாவதோ, இரவு 10 மணிக்கு மேல் பொழுதுபோக்குக் கருவிகளை பயன்படுத்துவதோ எப்படி சாத்தியமாகும்?
வீடுகளின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 70%, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலுமான 8 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. அதிக மின்சாரப் பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 10% -15% மின்சாரம்கூட பயன்படுத்தப்படுவதில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் வழக்கமான மின்சாரக் கட்டணம் தான் வசூலிக்கப்படும். 10 விழுக்காடு மின்சாரப் பயன்பாட்டுக்கு 5% கட்டண சலுகை வழங்கிவிட்டு, 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 25% உயர்த்துவதாகவே பொருளாகும்.
நுகர்வோரை கசக்கிப் பிழியும் இந்த நடவடிக்கைக்கு மின்சார நுகர்வோர் உரிமை விதி என்று பெயரிட்டிருப்பது முரண்பாடு. அரசு கட்டுப்படுத்த வேண்டியது நுகர்வோரை அல்ல... தனியார் நிறுவனங்களை. அவர்களுக்குப் பயந்து பொதுமக்களிடம் கட்டண உயர்வை திணிக்க முயல்வது ஏமாற்று வேலை’’ என்றார் அவர்.
மின்சார தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. சாமானிய மக்களும் மின்சாரத்தை நம்பி சிறு குறு தொழில்களைச் செய்து வரும் நிலையில், மத்திய அரசின் மின் திருத்தச் சட்டம் சொல்லும் விதிகளானது அவர்களின் வாழ்வாதாரத்தையும் நசுக்குவதாகவே உள்ளது. கட்டண உயர்வு என்கிற பெயரில் இப்படி சாமானியர் களை கசக்கிப் பிழியும் திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளை யோசிக்கட்டும் மத்திய அரசு!