`மாமூல் வந்து சேரவில்லை'- விபசார புரோக்கரிடம் போலீஸ்காரர் பேசும் அதிர்ச்சி ஆடியோ

`மாமூல் வந்து சேரவில்லை'- விபசார புரோக்கரிடம் போலீஸ்காரர் பேசும் அதிர்ச்சி ஆடியோ

மசாஜ் பார்லரில் பாலியல் தொழில் நடைபெற விபசார தடுப்பு பிரிவு அதிகாரிக்கு இடைத்தரகர் லஞ்சம் கொடுப்பது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக அதிகாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மசாஜ் பார்லர்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதை தடுக்க விபசார தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் விபசார புரோக்கர்களையும் கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு வருகின்றனர். இருப்பினும் சென்னையில் பல மசாஜ் பார்லர்களில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு விபசார தொழில் நடைபெறும் பார்லர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

மேலும் விபசார தடுப்பு பிரிவு போலீஸாரின் கெடுபிடிகளை சமாளிக்கவும், அவர்கள் அதனை கண்டும் காணாமல் இருக்க, ஒரு பார்லருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாதந்தோறும் விபசார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இடைத்தரகர்கள் லஞ்சமாக கொடுப்பது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர் ஜெ.பி என்பவரிடம், மாதம் தோறும் மாமூல் பணத்தை கொடுத்து வருவதாக புரோக்கர் பேசியுள்ளார். மேலும் தற்போது மாமூல் வந்து சேரவில்லை என்று காவலர் கேட்க, ஏற்கெனவே மாமூல் கொடுத்து விட்டதாகவும், இருப்பினும் சில நிமிடங்களில் அதனை உறுதி செய்வதாகவும் அந்த புரோக்கர் பதிலலித்துள்ளார்.

இதன் மூலம் மசாஜ் பார்லர் உரிமையாளர் மற்றும் புரோக்கர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக விபசார தொழில் நடப்பதற்கு ஒத்துழைப்பு அளித்து வருவது இந்த ஆடியோ மூலம் நிரூபணமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து விபசார தடுப்பு பிரிவு காவலர் ஜெ.பியிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் துறைரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆடியோவில் குறிப்பிட்டது போல் விபசார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு உடந்தையாக செயல்படுவது உறுதியாகும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே கடந்த 2018-ம் ஆண்டில், சென்னை காவல் துறையின் கீழ் செயல்படும் விபசார தடுப்பு பிரிவில், ஆய்வாளர்களாக பணிபுரிந்த சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னையில் விபசார தொழில் தங்கு தடையில்லாமல் நடைபெற தரகர்களிடம் பணம் பெற்று வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்து. தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணம் கைப்பற்றப்பட்டு, ஆய்வாளர்கள் இருவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஆய்வாளர்கள் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in