
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்வதாக டிஜிபி அலுவலகத்தில் உள்ள சமூக ஊடக மையத்திற்கு பேஸ்புக் செயலிக்கு (எஸ்ஓஎஸ்) தகவல் அனுப்பிய வாலிபரை விரைந்து சென்று காவல் துறை காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அந்த மாநில அரசு சமூக வலைதள செயலி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி தற்கொலை செய்யும் நோக்கம் உள்ள யாராவது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டால், அந்த தகவல் தானாகவே, உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விடும். இதன் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து சென்று தற்கொலையில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவார்கள்.
அந்த வகையில் லக்னோவில் நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 29 வயது வாலிபர் நீட் தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அந்த மாணவர், தோல்வியடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக பேஸ்புக் செயலிக்கு(எஸ்ஓஎஸ்) தகவல் அனுப்பினார். இந்த தகவல் அறிந்த லக்னோ போலீஸார், விரைந்து சென்று அந்த மாணவனைக் காப்பாற்றினார். அப்போது நீட் தேர்வு தோல்வியால் மன உளைச்சல் அடைந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது போன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டோன் என்று அவர் தெரிவித்தார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.