கோவை விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பானது: சிவசேனா பாராட்டு

கோவை விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பானது: சிவசேனா பாராட்டு

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து  விபத்து நடந்த  சம்பவத்தில் காவல்துறையின் விரைவான மற்றும்  துரித நடவடிக்கைக்கு  சிவசேனா கட்சி  பாராட்டு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூரில் தீபாவளிக்கு முன்தினம் நிகழ்ந்த எதிர்பாராத கார் சிலிண்டர் வெடிப்பு  சம்பவம் தமிழகம் முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மக்களிடையே இது பல்வேறு எண்ண ஓட்டங்களை உருவாக்கியது.  பதற்றமும் பீதியும் உருவான சூழ்நிலையில் காவல்துறை விரைந்து செயல்பட்டு, சம்பவம் நடைபெற காரணமாக இருந்த நபரை அடையாளம் கண்டிருக்கிறது.

அத்துடன்  அந்த நபரோடு தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரையும் விரைந்து கைது செய்ததுடன், கோவை பகுதியில் மேலும் வேறு எந்த சிறு அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பினை பலப்படுத்தியது.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த மக்களுக்கு எந்தவிதமான மன பீதி, பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல், தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறவும், மக்கள் அமைதியாக நடமாடவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் காவல்துறை சாதுரியமாகவும், நுட்பமாகவும்  மிகச் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.

இதனை  சிவசேனா  கட்சி மனமார பாராட்டுகிறது.  தமிழக முதல்வருக்கும் காவல்துறை தலைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் கோயமுத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேசத் துரோகிகளையும், பயங்கரவாதிகளையும் வளர்த்தெடுக்கும் சூழ்நிலை உருவாகிடாமல்,  மாநிலத்தை அமைதிப்பூங்காவாக  வைத்திருக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அதனை உணர்ந்து பயங்கரவாதிகளையும்,  தேச துரோகிகளையும் எங்கிருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேச விரோதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் தருவோர், உதவி செய்வோர் அனைவரையும் கண்டறிந்து, களை எடுத்து, சிறையில் அடைக்க வேண்டும், அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்"  என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in