‘ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது... நிலைக்காது!’ - ஆதித்ய தாக்கரே ஆரூடம்

‘ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது... நிலைக்காது!’ - ஆதித்ய தாக்கரே ஆரூடம்

“ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமானது. நீண்ட காலம் நீடிக்காது” என்று கூறியிருக்கிறார் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்திருந்த மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதும், அதன் பின்னணியில் பாஜகவின் ஆதரவு இருந்ததும் மகாராஷ்டிர அரசியல் சமீபத்தில் சந்தித்த பெரும் அதிர்வுகள். இந்துத்துவக் கொள்கை கொண்ட இயல்பான கூட்டணிக் கட்சியான பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டு மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் கொள்கைக்குன் விரோதமாகச் செயல்பட்டது, அரசியல் அனுபவம் இல்லாத தனது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கியது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முன்வைத்தனர். முதலில் குஜராத், பின்னர் அசாமுக்குச் சென்ற அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அங்கு சொகுச் ஹோட்டலில் தங்கினர்.

ஜூன் 20-ல் தொடங்கிய அரசியல் புயல் தொடர்ந்து 10 நாட்களுக்குச் சுழன்றடித்தது. நிலைமையைச் சமாளிக்க முடியாமல் உத்தவ் தாக்கரே பதவி விலகியதும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைந்தது. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வரானார்.

மத்திய மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் சிவசேனா கட்சித் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கவிழ்த்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது தனக்கு எந்தக் கோபமும் இல்லை என்றும் அவர்கள் குறித்து வருத்தப்படுவதாகவும் கூறினார்.

“சிவசேனா அரசைக் கவிழ்த்தவர்கள் தங்களைத் துரோகிகள் என்று அழைப்பதை விரும்பவில்லை. அவர்கள் உண்மையிலேயே பால் தாக்கரேயின் தொண்டர்களாக இருந்தால், அசாமுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவ களமிறங்கியிருப்பார்கள். ஹோட்டல் அறைகளில் இருந்தபடி மலைகளையும் இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளித்திருக்க மாட்டார்கள்” என்று கூறிய ஆதித்ய தாக்கரே, “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டவிரோதமானது. நீண்டகாலம் நீடிக்காது” என்றும் குறிப்பிட்டார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது, மத நல்லிணக்கத்தைப் பேணியது எனச் சிறப்பாகச் செயல்பட்ட உத்தவ் தாக்கரேயின் அரசைக் கவிழ்த்ததன் மூலம் மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரை விமர்சித்தார் ஆதித்ய தாக்கரே. “உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தவுடன், கோவாவில் இருந்த சிவசேனா எம்எல்ஏ-க்கள் ஏதோ பாரில் இருப்பது போல் நடனமாடினார்கள். அவர்கள் எப்போதும் துரோகிகள்தான்” என்றும் சாடினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in