’தமிழ்நாடு’ என பெயர் வைக்க தன்னுயிரையே தந்த தியாகச் செம்மல்!

- தியாகி சங்கரலிங்கனாரின் 66-வது நினைவு தினத்தில் ஒரு ‘சல்யூட்’ பகிர்வு
தியாகி சங்கரலிங்கனார்
தியாகி சங்கரலிங்கனார்

இன்றைக்கு, சென்னை மாகாணம் என்று சொன்னால் அது நம் மாநிலத்தின் முந்தைய பெயர் என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. முக்கியமாக, இந்தத் தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். சென்னை மாகாணம் என்றதை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றச் சொல்லி, ஐம்பதுகளில் தொடங்கி அறுபதுகளிலும் நீடித்த மிகப்பெரிய போராட்டங்களை பலரும் முன்னெடுத் தார்கள். அப்படியொருவர் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஒருநாளோ ஒருவாரமோ அல்ல... 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். அந்தத் தியாகச் செம்மல்... தியாகி சங்கரலிங்கனார்.

விருதுநகருக்குப் பக்கமுள்ள மண்மலை மேடு சின்னஞ்சிறிய கிராமம்தான் சங்கரலிங்கனாரின் பூர்விகம். கண்டன் சங்கரலிங்கனார் என்பார்கள். 1895-ம் ஆண்டு பிறந்தார். படிப்பில் கெட்டியாகவும் தேசத்தின் மீது பற்றுடனும் வளர்ந்தார். காங்கிரஸில் ஈடுபாடு வரவே அதில் தன்னை இணைத்துக் கொண்டார். காமராஜர் படித்த பள்ளியில்தான் இவரும் படித்தார்.

பின்னர் ராஜாஜியுடன் தொடர்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி, தண்டி யாத்திரை அறிவித்தபோது, ஓடோடிச் சென்று அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். கதராடை மீது ஆர்வம் ஏற்பட்டது. எளிமையான ஆடைகளையே உடுத்தினார். கதர் விற்பனையைத் தூண்டினார். கதர்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். சதாசர்வ காலமும் தேசத்தின் மீதும் தமிழின் மீதும் நம்முடைய மாநிலத்தின் மீதும் மக்களின் மீதும் அளப்பரிய பிரியத்துடனும் நேசத்துடனும் வாழ்ந்தார். இவரைப் பார்த்து, இவருக்குப் பின்னே ஒரு இளைஞர் படையே திரண்டு வந்தது.

அப்போதைய பம்பாய்க்கு சங்கரலிங்கனாரின் குடும்பம் சென்றுவிட, தன் சொத்துகளையெல்லாம் விருதுநகரில் உள்ள பள்ளிக்கு தானமாக எழுதிக்கொடுத்தார். இதைக் கண்டு ஊர்மக்கள் அதிசயித்துப் போனார்கள். விருதுநகர்ப் பக்கம் அருகே உள்ள சூலக்கரை எனும் கிராமத்தில், காந்தியின் கொள்கையாலும் எளிய வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட சங்கரலிங்கனார், சிறியதொரு ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

இந்த சமயத்தில்தான், பொட்டி ஸ்ரீராமுலு என்பவரின் உண்ணாவிரதம் இங்கே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படும் ம.பொ.சி. தனது ‘தமிழரசுக் கழகம்’ சார்பில் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். இதன் தாக்கத்தால் சங்கரலிங்கனார், கடும் கோபம் கொண்டார். ‘தமிழ்நாடு’ கோஷத்தை எழுப்பத் தொடங்கினார்.

அத்துடன், காங்கிரஸ்காரராக இருந்தாலும் 1956-ம் ஆண்டு, காங்கிரஸ் அரசுக்கு 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். ‘தனியே மொழிவழி மாகாணம் என்பது வேண்டும்; சென்னை மாகாணம், இனி ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப்படவேண்டும்; அரசியல் தலைவர்களின் தங்களது ஆடம்பர, வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, எளிய மக்களைப் போல வாழவேண்டும்; குறிப்பாக, தேர்தல் முறைகளில் மிகப்பெரிய மாற்றம் அவசியம்; தொழிற்கல்வி இருந்தால்தான் தேசம் வளரும்; இளைஞர்கள் முன்னேறுவார்கள். இந்தியா முழுவதும் மதுவிலக்கு நிறைவேற்றப்படவேண்டும்’ என்ற அவரது 12 அம்சக் கோரிக்கைகள் அனைத்துமே சரவெடியாக இருந்தது.

இந்தக் கோரிக்கைகளை ஒரு ஜூலை மாதத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அனுப்பியதுடன் நின்றுவிடாமல், அதே ஜூலை மாதம் 27-ம் தேதி, தனியாளாக அமர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் சங்கரலிங்கனார். தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவரது கோரிக்கைகள் எதையும் செவிசாய்க்கவில்லை காங்கிரஸ் அரசு. இத்தனைக்கும் மாநிலம் முழுவதும் இதுவே பேசுபொருளாக இருந்தது.

சங்கரலிங்கனாரின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமானது தொடர்ந்து கொண்டே இருந்ததைக் கண்டு, கட்சிப் பாகுபாடில்லாமல் அனைத்துத் தலைவர்களும் பதறிப் போனார்கள். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு ம.பொ.சி. கோரிக்கை விடுத்தார்.

அறிஞர் அண்ணா, “விட்டுவிடுங்கள் உண்ணாவிரதத்தை. வேறு வகையில் போராடுவோம்” என்றார். காமராஜரும் ஜீவானந்தமும் உண்ணாவிரத்தை கைவிடச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், தன் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார் சங்கரலிங்கனார். நாளுக்குநாள், நலிவுற்றுக்கொண்டே வந்தது அவரின் உடல்நிலை.

தியாகி சங்கரலிங்கனார்
தியாகி சங்கரலிங்கனார்

இதை அறிந்து மனம் வருந்திய அண்ணா, விருதுநகருக்குக் கிளம்பிச் சென்று நேரடியாகவே சங்கரலிங்கனாரைச் சந்தித்து போராட்டத்தைத் தடுத்துப் பார்த்தார். ஆனாலும் அவரின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்தது. ஜூலை மாதம் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் 79 நாட்களுக்கு நீடித்தது. அதனால் உடல்நலிவுற்ற சங்கரலிங்கனார் அக்டோபர் 10-ம் தேதி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். 13-ம் தேதி மறைந்தார்.

காங்கிரஸ் அபிமானியாக முன்பு இருந்தாலும் தன்னுடைய உடலை பொதுவுடைமைக் கட்சியிடம் கொடுக்கவேண்டும் என முன்பே குறிப்பிட்டிருந்தார் சங்கரலிங்கனார். அவருக்குப் பின்னர் மாணவர்கள், அவரின் நினைவாக உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தியாகி சங்கரலிங்கனார் சிலை
தியாகி சங்கரலிங்கனார் சிலை

1956-ம் ஆண்டு, அக்டோபர் 13-ம் தேதி தனது இறுதி மூச்சு வரை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக்கோரி போராடினார். இதையடுத்து இந்தப் போராட்டத்தை பலரும் கையிலெடுத்து முழங்கிக்கொண்டே இருந்தார்கள். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அறிஞர் அண்ணா முதல்வரானார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று இப்போதைய தலைமைச் செயலகத்தின் பெயரான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ‘தமிழக அரசு’ என பெயர் மாற்றி உத்தரவிட்டார் அண்ணா. இதையடுத்து அதே வருடமான 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

நவம்பர் 23-ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என மாறியதற்கு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. அப்போது மறக்காமல், தியாகி சங்கரலிங்கனாருக்கு நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை மக்களும் அரசியல் தலைவர்களும்!

1895-ம் ஆண்டு பிறந்த கண்டன் சங்கரலிங்கனார் என்கிற சங்கரலிங்கனார், 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி மறைந்தார். மறைந்து 66 ஆண்டுகளானாலும், ‘தமிழ்நாடு’ என்று சொல்லும்போதும் எழுதும்போதும் தியாகி சங்கரலிங்கனார், தமிழக மக்களால் நினைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இன்னமும் அவரைப் போற்றிக்கொண்டே இருப்பார்கள் மக்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in