மூன்றாண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த ஷேக் ஹசீனா: வங்கதேசப் பிரதமர் வருகையின் நோக்கம் என்ன?

டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தில் ஷேக் ஹசீனாவை வரவேற்கிறார் ரயில்வே மற்றும் ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்
டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தில் ஷேக் ஹசீனாவை வரவேற்கிறார் ரயில்வே மற்றும் ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்படம்: வி.வி.கிருஷ்ணன்

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நான்கு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்த அவர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோரைச் சந்திக்கவிருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவிருக்கின்றன.

இன்று காலை, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஜ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ‘விமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் புறப்பட்ட அவர், டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 2019-ல் இந்தியாவுக்கு வந்த பின்னர், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் டெல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

அவருடன் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென், வர்த்தகத் துறை அமைச்சர் திப்பு முன்ஷி, ரயில்வே துறை அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் உள்ளிட்டோர் வந்திருக்கின்றனர்.

மோடி விடுத்த அழைப்பு

முன்னதாக இதுகுறித்து டாக்காவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமென், “இது அதிகாரபூர்வமான பயணம். இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் ஹசீனா டெல்லி செல்கிறார்” எனக் குறிப்பிட்டார்.

நோக்கம் என்ன?

“இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தக உறவை மேம்படுத்துதல், மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு, நதிநீர்ப் பங்கீடு, நீர் மேலாண்மை, எல்லை பராமரிப்பு, போதைப்பொருள்; ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தையின்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று அப்துல் மோமென் தெரிவித்திருந்தார்.

மேலும், “நீர் மேலாண்மை, ரயில் போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்பு ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்” எனக் கூறிய அவர், ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர் ஒரு பிரதமர்களும் கூட்டாக அறிக்கை வெளியிடுவார்கள் என்றார்.

இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் வருகையின் மூலம், உறுதியான வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகளையும், நம்பிக்கை மற்றும் புரிதலையும் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான பன்முக உறவி மேம்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in