ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி; விரட்டிச் சென்ற கணவன்: கீழே விழுந்து உயிரிழந்த சோகம்

மனைவி பலி
மனைவி பலிஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி; விரட்டிச் சென்ற கணவன்: கீழே விழுந்து உயிரிழந்த சோகம்

ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை, கணவன் விரட்டிச் சென்று பிடித்து இழுத்தார். அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து மனைவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்தக் காந்தி நகர், 12-வது தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி பூமாதேவி. இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சிவா கொத்தனார் வேலையும், பூமாதேவி சித்தாள் வேலையும் செய்து வந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமாதேவிக்கும், படப்பை ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் சுந்தருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் தவறான தொடர்பு குறித்துச் சிவாவிற்குத் தெரியவந்தது. இதனால், கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காந்தி நகரில் பூமாதேவியும், படப்பை பெரியார் நகரில் சிவாவும், தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று இரவு பூமாதேவி, ஆண் நண்பர் சுந்தருடன் பைக்கில் சென்றுள்ளார். இதனைக் கண்ட, பூமாதேவியின் கணவன் சிவா தனது பைக்கில், அவர்களைப் பின்தொடர்ந்து, விரட்டிச்சென்றுள்ளார். அப்போது, மனைவி பூமாதேவியைப் பிடித்து இழுத்துள்ளார் சிவா. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பூமாதேவிக்கு, பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட, ஆண் நண்பர் சுந்தர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், தலையில் பலத்த காயமடைந்த மனைவியை, சிவா தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, சிகிச்சைக்காகப் படப்பை அடுத்தச் சாலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், பூமாதேவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில், மணிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், பூமாதேவி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்த பூமாதேவியின், கணவர் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in