ஒட்டகம் மீது மோதி விபத்து... ஓடாமல் நின்ற ரயில்!

ஒட்டகம் மீது மோதி விபத்து... ஓடாமல் நின்ற ரயில்!

ரயில்கள் மோதி உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் இன்று வரை குறையவில்லை. யானை போன்ற பெரிய மிருகங்கள் முதல் சிறிய விலங்குகள் வரை பல்வேறு உயிரினங்கள் தண்டவாளத்தைக் கடக்க முயலும்போது ரயில் மோதி உயிரிழக்கின்றன. அந்த வகையில், ஒட்டகம் மீது மோதிய ரயில் அதன் உடல் பாகங்கள் இன்ஜினில் சிக்கியதால் ஓடாமல் நின்றுவிட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

புது டெல்லி (என்டிஎல்எஸ்) ரயில் நிலையத்திலிருந்து மத்திய பிரதேசத் தலைநகர் போபாலின் ராணி கமலபதி ரயில் நிலையம் வரை சதாப்தி விரைவு ரயில் (12002) செல்கிறது. மத்திய பிரதேசத்தின் முரைனா நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேதாம்பூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 9 மணி அளவில் சதாப்தி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை ஓர் ஒட்டகம் கடக்க முற்பட்டது. அதிவேகத்தில் சென்ற ரயில் அதன் மீது மோதியதில் ஒட்டகத்தின் உடல் சிதறியது.

அதன் உடல் பாகங்கள் ரயில் இன்ஜினில் சிக்கிக்கொண்டதால், ரயில் நகர முடியாமல் அதே இடத்தில் நின்றுவிட்டது. இதையடுத்து அவற்றை அகற்றும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நடந்த அந்தப் பணிகளுக்குப் பின்னர்தான் இன்ஜின் தயார் நிலைக்கு வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தில் ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடைபெறுவதாகவும் ரயில்வே போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.