‘படைப்பு வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லையென்றால்...’ - சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் சசி தரூர்!

சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரையும் அதிரச் செய்திருக்கிறது. பாஜக அரசு, பிரிட்டிஷ் காலனி அரசு, காங்கிரஸ் தலைமை என யாரையும் விமர்சிக்கத் தயங்காதவரும், கருத்துச் சுதந்திரத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பவருமான காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அவர்களில் ஒருவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான சல்மான் ருஷ்டி, ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’, ‘ஃபியூரி’ போன்ற நாவல்கள் மூலம் புகழ்பெற்றவர். 1988-ல் வெளியான அவரது ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவல், முகமது நபியை அவதூறு செய்யும் வகையில் எழுதப்பட்டதாக இஸ்லாமிய மதகுருக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஈரானின் உயர் தலைவரான ரூகொல்லா கோமேனி, சல்மான் ருஷ்டிக்கு எதிராக ‘ஃபத்வா’ அறிவித்தார். அவரது தலைக்கு 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 22 கோடி ரூபாய்) விலை நிர்ணயிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்துக்குப் பல்வேறு நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி அரசும் அந்தப் புத்தகத்தைத் தடை செய்தது.

பிரிட்டனில் வசித்துவந்தபோது அவரைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. பின்னர் பல்வேறு நாடுகளில் மறைந்து வாழ்ந்தவர், 2016 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்துவருகிறார். அந்த ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களித்தார்.

இந்நிலையில், நேற்று நியூயார்க் நகரில் உள்ள சடாகுவா கல்வி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டியை, ஹாதி மட்டார் (24) எனும் இளைஞர் கத்தியால் பல முறை குத்தினார். இதில் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி, பென்சில்வேனியாவில் உள்ள எரீ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

தற்போது உயிர்காக்கும் கருவியின் துணையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சல்மான் ருஷ்டி, ஒரு கண்ணில் பார்வையை இழக்க வேண்டியிருக்கும் என்றும், அவரால் தற்போது பேச முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவரது கல்லீரல் பழுதடைந்திருப்பதாகவும், கைகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘சல்மான் ருஷ்டி விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். எனினும், அவரது வாழ்க்கை இனி முன்பைப் போல இருக்காது என்பதை அறிந்து மிகுந்த துயரமடைகிறேன். இது ஒரு மோசமான நாள். படைப்பு வெளிப்பாடு இனி சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்காது என்றால் அது இன்னும் மோசமான விஷயம்’ என்று சசி தரூர் வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in