‘வாக்களிப்பவர்களின் விவரங்களை வெளியிடுவதில் என்ன தவறு?’

காங்கிரஸ் தலைவர் தேர்தல் விவகாரத்தில் சசி தரூர் கேள்வி
மாநிலங்களவை உறுப்பினர் சசி தரூர்
மாநிலங்களவை உறுப்பினர் சசி தரூர்

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவிருப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் எனும் குரல் அக்கட்சியில் வலுத்துவருகிறது. ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி போன்ற தலைவர்களின் வரிசையில் இதுதொடர்பாகக் குரல் எழுப்பியிருக்கும் சசி தரூர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என கட்சியின் மத்தியத் தேர்தல் குழுவின் தலைவரான மதுசூதன் மிஸ்திரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடைசியாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் 2000-ல் நடந்தது. அந்தத் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜிதேந்திர பிரசாதா, தேர்தலில் முறைகேடு நடந்ததாகப் புகார் தெரிவித்தார். குறிப்பாக மாநில காங்கிரஸ் கட்சி அமைப்புகளின் (பிசிசி) பிரதிநிதிகள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக, ஜிதேந்திர பிரசாதா தரப்பு குற்றம்சாட்டியது. கட்சித் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற பிசிசி உறுப்பினர்களின் பட்டியலில், போலியான பெயர்கள் இருந்ததாகவும், பிரதிநிதிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

அதன் பின்னர் கட்சித் தலைவருக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. 2017-ல் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார் ராகுல் காந்தி. எனினும், 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் பதவிவிலகிய பின்னர், இடைக்காலத் தலைவராக சோனியா நீடிக்கிறார்.

ஜி-23 தலைவர்கள் உட்பட பலர் வலியுறுத்தியதன் பேரில், கட்சித் தலைவர் தேர்தல் நடத்த காங்கிரஸ் செயற்குழு முடிவெடுத்தது. அதன்படி அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் செப்டம்பர் 22-ல் வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதிவரை நடக்கும். வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் முடிவு அக்டோபர் 19-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், ஜி-23 குழுவைச் சேர்ந்த மணீஷ் திவாரி, கட்சித் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். “வாக்களிக்கவிருக்கும் பிரநிதிதிகளின் பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் எப்படி நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடக்கும்?” என்றும் வாக்களிக்கவிருப்பவர்களின் பெயர்கள் கட்சி இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் ட்வீட் செய்தார்.

ஆனால், “தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்களின் விவரம் பிசிசி-யிடம் இருக்கும். தேவைப்படுபவர்கள் அங்கு சென்று விவரம் தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் பொதுமக்களுக்கானவை அல்ல” என மதுசூதன் மிஸ்திரி விளக்கமளித்தார். ஆனால், இந்த விளக்கத்தை மணீஷ் திவாரி ஏற்கவில்லை. அவரது கருத்துக்கு கார்த்தி சிதம்பரம், சசி தரூர் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், மணீஷ் திவாரியின் கருத்தை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் மதுசூதன் மிஸ்திரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சசி தரூர். கட்சித் தலைவர் தேர்தல் ரேஸில் இருப்பவராகக் கருதப்படும் சசி தரூர், இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டால்தான் யாரெல்லாம் மனுத்தாக்கல் செய்ய முடியும், யாரெல்லாம் வாக்களிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட சசி தரூர், “வாக்களிப்பவர்களின் பட்டியல் விஷயத்தில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதைத்தான் மணீஷ் திவாரி கேட்டிருக்கிறார் என்றால், அதை அனைவரும் ஏற்க வேண்டும். வாக்களிப்பவர்களின் பட்டியலை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

அசாம் எம்.பி-யான பிரத்யூத் போர்தோலோயும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து மதுசூதன் மிஸ்திரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து, இப்படியான கோரிக்கை விடுப்பவர்களுக்கு சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இவ்விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்றும், காங்கிரஸ் கட்சியின் வெளிப்படையான தேர்தல் முறையால் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in