‘ஹியர் ஹியர் குஷ்பு சுந்தர்’ - பழைய சகாவைப் பாராட்டிய சசி தரூர்!

‘ஹியர் ஹியர் குஷ்பு சுந்தர்’ - பழைய சகாவைப் பாராட்டிய சசி தரூர்!

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து ட்வீட் செய்த பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்புவைத் தனது பாணியில் பாராட்டியிருக்கிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.

2002 குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு எனும் கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஒரு கும்பல் அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேரைப் படுகொலைசெய்தது. இவ்வழக்கில் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 2008 ஜனவரி 21-ம் தேதி, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராதேஷ்யாம் ஷா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக குஜராத் அரசு அமைத்த குழுவுக்கு கோத்ரா மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். அக்குழு 11 பேருக்கும் தண்டனைக் காலத்தைக் குறைக்கலாம் என ஏகமனதாக முடிவெடுத்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 15-ம் தேதி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கோத்ரா சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு அவர்களது உறவினர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றதுடன், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இவ்வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து ட்வீட் செய்த குஷ்பு, ‘பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, குரூரமாக நடத்தப்பட்டு, ஆன்மாவின் வடுக்கள் படிந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட ஒரு ஆண்கூட சுதந்திரமாக நடமாடக் கூடாது. அப்படி நடந்தால், அது ஆண் குலத்துக்கும் பெண் குலத்துக்கும் அவமானம். பில்கிஸ் பானுவும் சரி, வேறு எந்தப் பெண்ணும் சரி அரசியல் மற்றும் சித்தாந்தங்களைத் தாண்டி அவர்களுக்கு ஆதரவு தேவை’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குஷ்புவின் கருத்தை வரவேற்றிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர். இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘கேளுங்கள்... கேளுங்கள் குஷ்பு சுந்தர்! வலதுசாரித்தன்மை கொண்ட நிலைப்பாட்டை எடுப்பதைக் காட்டிலும் நன்மையின் பக்கம் நீங்கள் நிற்பதைப் பார்க்க பெருமிதமாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் வழக்கம்போல தனது ஆங்கில அறிவின் துணையுடன், ’ரைட் விங்’, ‘ரைட் திங்’ என ஆங்கில சிலேடை (pun) புலமை காட்டியிருக்கிறார் சசி தரூர்.

பாஜகவில் இணைவதற்கு முன்பு குஷ்பு காங்கிரஸில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in