பாலியல் டார்ச்சர் செய்த ரவுடியை சிறையில் தள்ளிய இளம்பெண்; மிரட்டலால் தீக்குளிப்பு: நீதிபதியிடம் மரண வாக்குமூலம்

பாலியல் டார்ச்சர் செய்த ரவுடியை சிறையில் தள்ளிய இளம்பெண்; மிரட்டலால் தீக்குளிப்பு: நீதிபதியிடம் மரண வாக்குமூலம்

பாலியல் உறவுக்கு வற்புறுத்திய ரவுடியை சிறையில் தள்ளிய பெண்ணுக்கு மிரட்டல் தொடர்ந்தால் அவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 90 சதவீத காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணாநகர் அன்னை சத்தியாநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (26). அவரது கணவர் விஜயகுமார். இந்த தம்பதிக்கு தேவா(6), நித்திஷ்(4) என்ற மகன்கள் உள்ளனர்.இவரது மூத்தமகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பிலும், இளையமகன் எல்கேஜியும் படித்து வருகின்றனர். கணவர் விஜயகுமாருக்கு தற்போது வேலை எதுவும் இல்லாததால் மகாலட்சுமி அண்ணாநகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபல ரவுடி ராபர்ட் என்பவர் கடந்த சில மாதங்களாக மகாலட்சுமியை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு செய்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் ரவுடி ராபர்ட் தன்னை பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தி மிரட்டல் விடுப்பதாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ரவுடி ராபர்ட்டை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ரவுடி ராபர்ட் சிறையில் அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அடிக்கடி மகாலட்சுமி வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தகாத வார்த்தையால் கீழ்தரமாக திட்டிவந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மகாலட்சுமியின் கணவர் உறவினர் ஒருவருடன் விஷேச நிகழச்சிக்கு பத்திரிகை வைக்க சென்றுவிட்டதால் மகாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று இரவு மகாலட்சுமி வீட்டிற்கு வந்த ரவுடி ராபர்ட் உறவினர் அமுலு(36) உள்ளிட்ட சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி வீட்டில் இருந்த தின்னரை ஊற்றி தீ குளித்து தற்கொலை முயன்றுள்ளார். மகாலட்சுமி அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமி உடல் முழுதும் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தீயை அணைத்து மகாலட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 90% தீக்காயமடைந்த மகாலட்சுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மகாலட்சுமியிடம் அதிகாலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வைஷ்ணவி மரண வாக்குமூலம் பெற்று சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in