மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் போக்சோவில் கைது

ஜார்ஜ் ஆபிரகாம்
ஜார்ஜ் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாசாலை நந்தனம் பகுதியில் ஓய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் படித்து வரும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்கு மூன்று மாதங்களாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் ஓய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கல்லூரி முதல்வர் ஆபிரகாமுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் ஒரு மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் ஒரு மாணவி, கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொந்தரவு அளித்தாக கல்லூரி தாளாளரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், முதல்வர் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சைதாப்பேட்டை ஆய்வாளர் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவியிடம் நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் ஜார்ஜ் ஆபிகாரம் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in