மிட்டாய் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

தலைமை ஆசிரியர் சகலகலாதரன்
தலைமை ஆசிரியர் சகலகலாதரன்மிட்டாய் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடிக் கொடுத்த பொதுமக்கள்!

வருகைப் பதிவெடு எடுக்க தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை செய்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கொடியம் கிராமத்தை சேர்ந்த சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றுள்ளார். அப்போது, தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு, சாக்லெட் கொடுத்துள்ளார்.

இதை வாங்கியபோது, தலைமை ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அங்கிருந்து வெளியே வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி, வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். கடந்த ஒருவாரமாக பத்தாம் வகுப்பு தேர்வு பணிக்கு சென்ற தலைமை ஆசிரியர் நேற்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில், அந்த மாணவி, தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நேற்று சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த ரோசணை காவல் நிலைய ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க தலைமை ஆசிரியரின் முகத்தை மறைத்து, போலீஸார் பாதுகாப்பாக வேனில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரை, பொது மக்கள் சூழ்ந்து கொண்டு, சராமரியாக தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களின் பிடியில் இருந்து தலைமை ஆசிரியரை போலீஸார் மீட்டு, வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் சகலகலாதரனிடம், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மற்றும் சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in