`அதிக சம்பளம் தருகிறேன்; எனது ஆசைக்கு இணங்கு'- நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்

`அதிக சம்பளம் தருகிறேன்; எனது ஆசைக்கு இணங்கு'- நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்

சென்னையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் மருத்துவமனை உரிமையாளர், பேராசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அன்னை பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் அக்டோபர் மாதம் முதல் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். மேலும் நர்சிங் படிப்பு தொடர்பாக அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி இரவு நேர பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு 10 மணியளவில் நர்சிங் மாணவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றபோது அந்த மருத்துவமனையின் உரிமையாளரும், தலைமை மருத்துவருமான விவேகானந்தன், மாணவியை தனியாக அழைத்து குடும்ப விவரங்களை கேட்டறிந்ததுடன், உன்னையும், உனது குடும்பத்தையும் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். மருத்துவமனையிலேயே அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்வதாக கூறி மாணவியின் கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை உரிமையாளர் என்பதால் மாணவி அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் இரவு 1.30 மணியளவில் நோயாளிகளின் உடல் நிலையை ஆய்வு செய்துவிட்டு லிஃப்டில் திரும்பி வரும்போது உடன் ஏறிக்கொண்ட மருத்துவர் விவேகானந்தன், நான் கூறியது புரிந்ததா என மாணவியிடம் கேட்டு மீண்டும் பாலியலுக்கு இணங்குமாறு வற்புறுத்தி அவரது கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் மாணவி, மருத்துவர் விவேகானந்தன் அளித்த பாலியல் தொல்லை குறித்து தனது அகாடமியில் உள்ள பேராசிரியை ஒருவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு கூறியதற்கு, அவர், தான் தற்போது ஊரில் இல்லை. வர சிறிது நாட்கள் ஆகும் என கூறியதுடன், இத்துறையில் இதெல்லாம் சகஜம். மருத்துவர் கூறியபடி அனுசரித்து நடக்கும்படி மாணவியிடம் தெரிவித்துள்ளார். மேலும், தானும் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளதாகவும் இதைப்பற்றி வெளியில் யாரிடமும் கூற வேண்டாமெனவும் மாணவியிடம் பேராசிரியை அறிவுறுத்தியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன மாணவி, பேராசிரியை செல்போனில் பேசிய ஆடியோ பதிவுடன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை உரிமையாளரான தலைமை மருத்துவர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in