சிறுமி, சிறுவர் 5 பேருக்கு பாலியல் தொல்லை; 62 வயது முதியவருக்கு 5 ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமி, சிறுவர் 5 பேருக்கு பாலியல் தொல்லை; 62 வயது முதியவருக்கு 5 ஆயுள் தண்டனை உறுதி:  உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூரில் 3 சிறுமிகள், 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 62 வயது முதியவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் நார்த்தேவன்குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (62). இவர் தனது வீடு அருகே வசிக்கும் 9 வயதுக்கு உட்பட்ட 2 சிறுமிகள், 2 சிறுவர்கள், 3 வயது சிறுமிக்கு கடந்த 2015 அக்டோபர் மாதம் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் நாராயணனை தஞ்சாவூர் தாலுகா போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு 5 ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2019-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நாராயணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் குழந்தைகள் கடவுளின் அவதாரமாக மதிக்கப்படுகின்றனர். அவர்களை பாலியல் கொடுமை உட்பட எந்த வித கொடுமைக்கும் ஆளாக்கப்படக்கூடாது. இந்த வழக்கில் 3 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது கொடூரமானது.

குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகரித்துள்ளது. இதை தடுக்க சமூக இயக்கம் தொடங்க வேண்டும். குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நல்லொழுக்க கல்வியைக் கற்பிக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். குழந்தைகளைப் பாதுகாக்க தவறினால் எதிர்காலத்தில் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். பாதுகாப்பான குழந்தைகள் வாழும் சமூகத்தை உருவாக்குவது நமது கடமையாகும்.

இந்த வழக்கில் சிறுவர், சிறுமிகளை மனுதாரர் மிரட்டி பாலியல் பாலியல் உறவு வைத்துள்ளார். இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் 5 ஆயுள் தண்டனை வழங்கி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனுதாரரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in