
என்னை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் ஒருவர் தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர் சத்யபிரியா என்ற இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், சத்யபிரியா இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சேதுபதியின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனிடையே, சத்யபிரியாவை சேதுபதி காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பின்னர் அவரை விடுவித்துச் சென்றுள்ளார்.
பின்னர் இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சத்யபிரியா புகார் அளித்தார். அதில், தன்னை காரில் கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.