விளையாட்டுத் துறை அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு

அரியானாவில் வெடித்த சர்ச்சை
பிரதமர் மோடியுடன் அரியானா அமைச்சர் சந்தீப் சிங்
பிரதமர் மோடியுடன் அரியானா அமைச்சர் சந்தீப் சிங்

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் மீது, பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பது அங்கே சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங். அரியனாவை சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர் மற்றும் தேசிய அணியின் கேப்டனாக சிறப்பிடம் வகித்த சந்தீப் சிங், தற்போது மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

இவர் மீது தேசிய தடகள வீராங்கனையும், தடகள பெண் பயிற்சியாளருமான ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அமைச்சர் சந்தீப் சிங்குக்கு எதிரான புகார்களை அடுக்கியுள்ளார்.

ஹாக்கி களத்தில் சந்தீப் சிங்
ஹாக்கி களத்தில் சந்தீப் சிங்

இன்ஸ்டாகிராம் வாயிலாக தனிப்பட்ட உரையாடல்களை ஆரம்பித்த அமைச்சர் சந்தீப் சிங், பின்னர் ஆவணங்களை சமர்பிப்பது தொடர்பாக தனது முகாம் அலுவலகத்துக்கு வரவழைத்து முறையற்ற வகையில் நடக்க முயற்சித்ததாகவும் பெண் பயிற்சியாளர் குற்றம்சாட்டி உள்ளார். தற்போது 400மீ ஓட்டத்தில் தேசிய தடகள வீராங்கனையாக விளங்கும் இந்த பெண் பயிற்சியாளர், அண்மையில் போதுமான தடகள வசதி இல்லாத ஊருக்கு தூக்கியடிக்கப்பட்டார். வேறுவழியின்றி தனது பணிமாறுதல் தொடர்பாக துறை அமைச்சர் சந்தீப் சிங்கை நேரடியாக சந்தித்தபோது, விருப்பத்துக்கு உடன்பட்டால் மட்டுமே பழைய இடத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டும் என்று சந்தீப் சிங் அழுத்தம் கொடுத்ததாகவும் பெண் பயிற்சியாளரின் குற்றச்சாட்டுகள் நீளுகின்றன.

அமைச்சரின் வரம்பு மீறிய நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக, மாநில காவல்துறை தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வரை சந்திக்க முயற்சித்தபோதும், சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிட்டவில்லை என்றும் பெண் பயிற்சியாளர் அடுத்த குற்றச்சாட்டினை வீசியுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் மீதான புகார் அரியானாவில் வெடித்ததை அடுத்து இந்திய தேசிய லோக் தளம் கட்சி, பாஜக முதல்வரான மனோகர் லால் கட்டாருக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. “பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். விசாரணை முறையாக நடைபெற அமைச்சர் சந்தீப் சிங்கை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று கோரி உள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து அடிப்படை மற்றும் ஆதாரமற்றவை என்று விளக்கமளித்திருக்கும் அமைச்சர் சந்தீப் சிங், பெண் பயிற்சியாளரின் குற்றச்சாட்டின் பின்னே அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் பதிலுக்கு குற்றம்சாட்டி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in