ரயிலில் அழுக்கு போர்வைகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி - பல பயணிகளுக்கு உடல்நலக்குறைவு

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

லக்னோவிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அழுக்கு போர்வைகள் வழங்கப்பட்டதால், அதில் பயணம் செய்த பலரும் நோய்வாய்ப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து வாரணாசிக்கு செல்லும் 15008 கிரிஷாக் எக்ஸ்பிரஸில், அழுக்கு போர்வைகள் விநியோகம் செய்யப்பட்டதால் திங்களன்று மூன்று பயணிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ சந்திப்பில் இருந்து புறப்படும் போது, ஏசி கோச் பி-5 இல் இருந்த பயணிகள் போர்வைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் போர்வைகள் மாற்றப்பட்டன, ஆனால் ரயில் பாட்ஷாநகர் ரயில் நிலையத்திற்கு வந்ததும், சில பயணிகள் வாந்தி எடுக்கத் தொடங்கினர். அதன்பிறகு, அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டு பாட்ஷாநகர் ரயில்வே மருத்துவமனையின் மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது.

மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, மூன்று பயணிகளிடம் விசாரணை நடத்தினர். போர்வையில் வீசிய துர்நாற்றம் மற்றும் தூய்மையின்மை காரணமாக, குமட்டல் ஏற்படத் தொடங்கியதாக பயணிகள் தெரிவித்தனர். பயணிகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், ரயில் மீண்டும் பயணத்தை தொடங்கியது.

இந்த அதிர்ச்சி சம்பவம், ரயில்களில் போர்வை விநியோகத்தின் தூய்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பயணி ஒருவர் புகாரும் அளித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in