திடீரென தொடர்பு துண்டிப்பு; கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்ன?: தேடுதல் பணியில் கடலோர காவல்படை

திடீரென தொடர்பு துண்டிப்பு; கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்ன?: தேடுதல் பணியில் கடலோர காவல்படை

காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஏழு பேர் தொடர்பின்றி மாயமானதால் காரைக்காலில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கடந்த 18-ம் தேதியன்று கிருஷ்ணமூர்த்தியுடன் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம்(40), வேலுச்சாமி (55), செந்தில் (38), கீழகாசாக்குடி மேட்டைச் சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய ஏழு பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு கடந்த 20 -ம் தேதியன்றே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நேற்று மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை. அதனால் கரையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்பு கிடைக்கவில்லை. மேலும் மீனவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இதனால் காரைக்கால் மேடு மீனவப் பஞ்சாயத்தார்கள் இது குறித்து காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் மர்த்தினி வழக்கு பதிவு மீனவர்களின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கடைசியாக மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு மீனவர்களின் செல்போன் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று காலை முதல் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்று கடையில் உள்ள மீனவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் நிலை என்னவானது என்பது தெரியாதது காரைக்கால் மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in