வாடிக்கையாளர்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஏழைகளுக்கு உதவி: கேரள தேநீர் கடையில் சுவாரஸ்யம்

வாடிக்கையாளர்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஏழைகளுக்கு உதவி:
கேரள  தேநீர் கடையில் சுவாரஸ்யம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம், சாஸ்தமங்கலம் பகுதியில் உள்ளது சிந்தியா தேநீர் ஸ்டால். இந்த கடையை நடத்தும் சந்திரனுக்கு அந்தப் பகுதிவாசிகள் ரசிகர் மன்றம் மட்டும்தான் வைக்கவில்லை. அந்த அளவிற்கு சந்திரனும், அவரது தேநீர் கடையும் பிரபலம்.

சாஸ்தமங்கலம், ராஜா கேசவதாஸ் என்.எஸ்.எஸ் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கிறது இந்த தேநீர்கடை. இந்தக்கடையின், 'வாடிக்கையாளர்களே மார்னிங் ப்ரண்ட்ஸ்', 'ஒரு சாயா கூட்டாயுமா?', 'சந்திரன் கடையில் சாயா கூட்டாயுமா?' என மூன்று வாட்ஸ் அப் குழுக்களையும் வைத்துள்ளனர். வெவ்வேறு வாட்ஸ் அப் குழுக்களைச் சேர்ந்த இவர்களை இணைக்கும் புள்ளியாக சந்திரனும், அவரது தேநீர் கடையுமே உள்ளது.  தினமும் காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிவரையும் இந்தக்கடை திறந்திருக்கும். 

இந்த தேநீர் அகத்தின் சிறப்புகள் பற்றி காமதேனுவிடம் ஓய்வுபெற்ற போக்குவரத்து துணை கண்காணிப்பாளர் அப்துல் கூறுகையில், “சந்திரனின் தேநீர்கடை என் சிறுவயது நண்பர்களை அப்படியே இன்னும் நண்பர்களாகவே வைத்துள்ளது. நாங்கள் அடிக்கடி இங்கு சந்தித்துக்கொள்வோம். தினமும் காலையில் நடைபயிற்சி செய்துவிட்டு இங்குதான் தேநீர் குடிக்கவருவோம். எங்களது அரட்டையில் சந்திரனும் சேர்ந்துகொள்வார். 'மார்னிங் ப்ரண்ட்ஸ்' என்னும் வாட்ஸ் அப் குழுவை இங்கே தேநீர் குடிக்கவரும் நண்பர்கள்  சேர்ந்து உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் பல சேவைகளும் செய்துவருகிறோம். ஏழைகளுக்கும் நேசக்கரம் நீட்டிவருகிறோம் ”என்றார் 

'ஒருசாயா கூட்டாயுமா' வாட்ஸ் அப் குழுவை நிர்வகிக்கும் அரசு ஊழியரான குமார், “எங்கள் குழுவில் இந்த டீக்கடைக்கு தினசரிவரும் 19 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்தக் குழுவை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பதிவும் செய்ய உள்ளோம். ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் இந்த தேநீர்கடையிலேயே எங்கள் சந்திப்பை நடத்திவருகிறோம். நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும், யாருக்கு எப்படி டீ போட வேண்டும் என நன்கு அறிந்திருக்கும் சந்திரன் அவராகவே அந்தப் பக்குவத்தில் போட்டுத்தருவார். இந்த தேநீர்கடையில் மலையாள தினசரி, வார, பருவ, மாத இதழ்கள் மட்டுமல்லாது போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களும் இருக்கும். அண்மையில் குடிமைப்பணித் தேர்வில் வென்ற மருத்துவர் மிதுன் பிரேம்ராஜ் இந்த கடைப் புத்தகங்களையும் பயன்படுத்தியவர். இதனால் சந்திரன் அவரையே அழைத்து பரிசு கொடுத்தார்.  இந்த தேநீர் கடைக்கு பல்வேறு அரசியல்கட்சிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வருவார்கள். அப்படி வருபவர்கள் தங்கள் அரசியலைப் பேசுவதும் வழக்கம். அனைவருக்கும் ஈடுகொடுத்து சந்திரனும் பேசுவார். ஆனால் அவரது அரசியல்பார்வையை, அவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பதை எங்களால் இன்றுவரை கணிக்கமுடியவில்லை ”என்றார்.

தேநீர் கடை உரிமையாளரான சந்திரனோ, “என் அப்பாவும் தேநீர் கடை தான் வைத்திருந்தார். நான் மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்கிறேன். அப்பா இறப்பால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்த கடையைத் தொடங்கினேன். கடைக்கு சிந்தியா என என் மகள் பெயரையே வைத்தேன். அவர் இப்போது மருத்துவக்கல்லூரியில் பயின்றுவருகிறார். கடைக்கு வரும் அனைவரோடும் இன்முகத்தோடு பேசுவேன். நலம் விசாரிப்பேன். வருபவர்களுக்கு அது பிடித்துப்போய் இந்தப்பகுதியில் பலரது சந்திப்பு மையமாக இந்த கடை உருவாகிவிட்டது. பலரும் வாட்ஸ் அப் குழுக்களையும் இந்த கடையை மையப்படுத்தித் தொடங்கி, சேவையிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது ”என்றார். 

தேநீர் கடையென்றால் அரட்டையடிக்கும் இடம் என்ற பார்வையை உடைத்து அதை சேவை செய்யும் இடமாகவும் மாற்ற முடியும் என்பதை சந்திரனின் கடை இந்த சமூகத்திற்கான புதிய செய்தியைத் தந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in