‘இலவசம் மிக முக்கியமான பிரச்சினை; நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது!’

விரிவான விசாரணை அவசியம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து
‘இலவசம் மிக முக்கியமான பிரச்சினை; நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது!’

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், இலவசம் மிக முக்கியமான பிரச்சினை என்றும், இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்றும் கூறியிருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இது குறித்த மனுக்களை மூன்று நபர் அமர்வுக்கு மாற்றுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

2013-ல் எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில் அளித்த தீர்ப்பை மூன்று நபர் அமர்வு மறுபரிசீலனை செய்யும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்திருக்கிறார்.

எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில் இலவசங்கள் தொடர்பான விதிகள் எதுவும் இல்லாத நிலையில், தேர்தல் கால இலவசங்களை சட்டவிரோத நடவடிக்கையாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழகத்தில், தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் அறிவித்த இலவசப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதைத் தடை செய்யவும் மறுத்துவிட்டது.

இந்நிலையில், இலவசங்களைத் தடை செய்யக் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை விசாரித்துவரும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “இலவசம் தொடர்பான சிக்கல்களையும், சுப்ரமணியம் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவையும் பரிசீலித்ததன் அடிப்படையில், இதுதொடர்பான மனுக்களை மூன்று நபர் அமர்வுக்கு மாற்றுகிறோம்” என்று இன்று தெரிவித்திருக்கிறது.

இந்த மனுக்கள், நான்கு வாரங்களில் பட்டியலிடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in