தனியார் வங்கிக் கொள்ளை வழக்கில் அடுத்த திருப்பம்: இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 2 பெண்களைத் தட்டித் தூக்கிய போலீஸ்

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்.
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்.

சென்னை தனியார் வங்கிக் கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் மனைவி, கொள்ளையன் மனைவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கடந்த 13-ம் தேதி 31.7கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கொள்ளைக் கும்பல் தலைவன் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, செந்தில்குமரன், சந்தோஷ், பாலாஜி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோரை நேற்று முன்தினம் அரும்பாக்கம் போலீஸார், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீதமுள்ள நகைகளை மீட்க கோவை நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவட்சன், ஸ்ரீராம் உட்பட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்.
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்.

இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள சந்தோஷ், பாலாஜி இருவரிடம் நடத்திய விசாரணையில் அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.7கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் மேல்மருவத்தூர் மருவூர் அவென்யூ பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.7கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்சி இந்திரா ஆகியோரை தனிப்படை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அச்சிரப்பாக்கம் மெர்சி இந்திராவும், கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பது தெரியவந்தது. நகைகளைக் கொள்ளையடித்தவுடன் சந்தோஷ் அவரது மனைவி ஜெயந்தி மூலமாக காவல் ஆய்வாளரின் மனைவி மெர்சியிடம் கொடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணி இடைநீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மெர்சி இந்திரா மற்றும் கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகிய இருவரும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in