பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் சரிகிறதா இடதுசாரிகளின் செல்வாக்கு?

ஓயாத சர்ச்சைகள்... ஒழியாத பிரச்சினைகள்!

கேரளத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் வாகை சூடியது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆழப்புழா மட்டுமே மிஞ்சியது. அதே வரலாற்றை 2024 மக்களவைத் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும் என்று அரசியல் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

டிஜிட்டல் சர்வே விவகாரத்தில் கேரளத்திற்குள்ளேயே புகையும் கனல், விழிஞ்சம் துறைமுகம் விவகாரத்தில் மீனவர்கள் மத்தியில் சரிந்திருக்கும் பினராயி விஜயனின் செல்வாக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தால் கேரளத்தில் காங்கிரஸ் அடைந்துள்ள எழுச்சி ஆகியவற்றையும் இதை மையப்படுத்திச் சுட்டிக்காட்டுகின்றனர் கதர் பார்ட்டிகள்!

முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சியில் புதுப் புதுத் திட்டங்கள் பலவற்றை அமல்படுத்தினார் பினராயி. ஆனால், இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்குவந்த மார்க்சிஸ்ட் கட்சி, அதே திட்டங்களைத் தொடர்கிறதே தவிர, புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் பிரச்சினைகள் மார்க்சிஸ்ட் கட்சியை இன்னும் பலவீனப்படுத்துகிறது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. அதானியின் பங்களிப்புடன் கேரள அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் துறைமுகத்தால் தங்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதில் தாக்குதல், வழக்கு என விவகாரம் நீண்டு, இப்போதுதான் ஓய்ந்துள்ளது. இருந்தும் இவ்விவகாரம் மீனவர்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருந்த நற்பெயரை வெகுவாகவே கூறுபோட்டுவிட்டது.

ஆரிப் முகமதுகான்
ஆரிப் முகமதுகான்

மார்க்சிஸ்ட் கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பது கேரள காங்கிரஸ் (எம்). இந்தக் கட்சிக்கு அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மேற்கொண்டு வரும் டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு கோட்டயம் அருகில் உள்ள தாமரசேரி பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவ் விஷயத்தில் கூட்டணி தோழனான கேரள காங்கிரஸ் (எம்) கட்சியே ஆளும் கட்சியுடன் முரண்பட்டு நிற்கிறது.

கேரள எதிர்கட்சித் தலைவரான வி.டி.சதீசன், “கிராமப்பகுதிகளில் ஏராளமான புதிய கட்டுமானங்கள் நடந்துள்ளன. அதைப் பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் செயற்கைக்கோள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. இந்த செயற்கைக்கோள் ஆய்வு முடிவுகளை மத்திய அரசிடமோ, உச்சநீதிமன்றத்திலோ சமர்ப்பித்தால் அது மாநில மக்களின் நலனுக்கே கேடாக முடிந்துவிடும். செயற்கைக்கோள் ஆய்வை கைவிட்டு நேரடியாக அலுவலர்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள ஒருகிலோ மீட்டர் பகுதியை தாங்கல் மண்டலங்களாக அறிவிக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையிலேயே இந்த ஆய்வை மேற்கொண்டதாகச் சொல்கிறது கேரள அரசு. தொடர் போராட்டங்களினால், “இப்போது டிஜிட்டல் சர்வேயை சமர்பிக்க மாட்டோம். நேரடியாக அலுவலர்களை வைத்தே கணக்கெடுப்பு செய்வோம்” என அறிவித்துள்ளது அரசு. விழிஞ்சம் துறைமுகப் போராட்டத்தில் பின்னால் இருந்து இயங்கிய காங்கிரஸ் கட்சி டிஜிட்டல் சர்வே விவகாரத்தில் நேரடியாகவே போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

கேரள இடதுசாரி அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே கடும் மோதல் தொடர்கிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் மதிப்பதில்லை என கச்சை கட்டுகின்றனர் காம்ரேடுகள். ராஜ்பவனுக்கே செய்தியாளர்களை அழைத்து இடதுசாரி அரசை நேரடியாகவே விமர்சித்து ஆளுநர் பேட்டிகொடுக்கும் அளவுக்கு மார்க்சிஸ்ட் களுக்கும், ஆளுநருக்கும் இடையே முட்டிக் கொண்டு நிற்கிறது பகை.

ஒருகட்டத்தில், ‘அமைச்சர்களை பதவிநீக்கம் செய்துவிடுவோம்’ என்று ஆளுநர் மாளிகை மறைமுக மிரட்டல் விடுத்தது. அதற்கெல்லாம் சளைக்காத தோழர்கள், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கே அனுப்பிவைத்தார்கள்.

கேரள அரசியலை கதிகலக்கிய பெயர்களில் ஒன்று ஸ்வப்னா சுரேஷ். தங்கக்கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பியவர். கடந்த 2020-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். ’சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

இப்படி, விழிஞ்சம் துறைமுகம் விவகாரம் தொடங்கி, ஸ்வப்ணா சுரேஷின் புத்தகம் வரை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதற்கே தோழர்களுக்கு நேரம் போதவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை விட காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வாகைசூட ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதும் ஒருகாரணம். ராகுல் காந்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். பிரதமராகவும் வருவார் என காங்கிரஸார் மட்டுமல்ல, கேரள மக்களும் நம்பினர். அதனால் தான் இந்தியாவிலேயே கேரளத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. அதே ராகுல் அஸ்திரத்தை இந்தத் தேர்தலிலும் பயன்படுத்த உள்ளது கேரள காங்கிரஸ்.

உத்திரப்பிரதேசத்தில் களமிறங்கினாலும் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்கிறார்கள் கேரள காங்கிரஸார். அதனால் ராகுல் அஸ்திரம் இந்தத் தேர்தலிலும் கேரளத்தில் ரியாக்ட் செய்யும் என்கிறார்கள். தமிழகத்தில் குமரியில் மட்டும் நடைபயணம் சென்ற ராகுல் காந்தி, கேரளத்தில் முழுதாக 20 நாள்கள் நடைபயணம் செய்ததையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

இந்தியாவில் முன்னோடி திட்டமாக மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகம் தான் கே ரயில் திட்டம். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை தனி ரயில் பாதை அமைத்து ரயில் விடும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசும் பச்சைக்கொடி காட்டியது. ஆனால், இதற்கான நிலம் கையகப்படுத்துதலில் விளைநிலங்கள் பறிபோவதாகவும், குடியிருப்புகள் அழியும் அபாயம் இருப்பதாகவும் சொல்லி போராட்டங்கள் வெடித்தன.

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கைகோத்து இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடின. மார்க்சிஸ்ட் கட்சியோ, “நாங்கள் வளர்ச்சியைக் காட்டிவிடுவோம் என்னும் அச்சத்தில் எதிர்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன” என்றது. ஆனாலும் மக்களின் ஓயாத போராட்டத்தால் கே ரயில் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

ஆர்யா ராஜேந்திரன்
ஆர்யா ராஜேந்திரன்

இந்தியாவிலேயே இளம் வயது மேயர் என அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன். திருவனந்தபுரம் மாநகராட்சியில் சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும், அதற்காக பெயர்களை பரிந்துரைக்குமாறும் ஆர்யா ராஜேந்திரன் பெயரில், திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஆர்யா ராஜேந்திரன் இதை மறுத்தாலும் காங்கிரஸ் வீதி வீதியாகப் போய் பிரச்சாரம் செய்தது. இப்படி பினராயி விஜயன் அரசும் ஆளும் மார்க்சிஸ்ட்டுகளும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி அரசியல் கட்சிகளுக்கு அவலாகி வருகிறார்கள்.

எம்.வி.கோவிந்தன்
எம்.வி.கோவிந்தன்

இத்தகைய தொடர் பிரச்சினைகளால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவா என்ற கேள்வியுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் பேசினோம்.

“கேரள மக்கள் இடதுசாரிகளுக்கு மிக நெருக்கமாகவே இருக்கின்றனர். ஏற்கெனவே இடதுசாரி அரசு இருந்ததால்தான் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அப்படியே தொடர்கின்றன. இதுவே சாதனைதானே? லைஃப் மிஷன் என்னும் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வீடற்ற ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து உள்ளோம். அது இப்போதும் தொடர்கிறது. குக்கிராமங்கள் வரை இல்லம்தோறும் இணையம் என்பதைக் குறிவைத்து ’கே போன்’ திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். காங்கிரஸை விட மதவாதத்தை எதிர்ப்பதில் உறுதியான குரலை மார்க்சிஸ்ட் கட்சியே எழுப்புகிறது என்பதால் கேரள மக்கள் எங்கள் பின்னால் இருக்கிறார்கள்.

கேரளத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டது. ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை, தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. அதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுக்கும் மேலாக இருக்கிறது. இந்தமுறை நிலமை அப்படி இல்லை. பாஜகவும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என கேரள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாங்கள் நீடித்த, நிலைத்த, நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறோம். விளம்புநிலை தொழிலாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பு மக்களும் இம்முறை எங்களுக்கு பெரிய ஆதரவைத் தருவார்கள். மக்களவைத் தேர்தலில் கடந்தமுறை எங்களை வீழ்த்திய காங்கிரஸை இம்முறை திருப்பி அடிப்போம்” என்றார் அவர்.

தோழர் கோவிந்தன் இப்படிச் சொன்னாலும் கேரள மக்கள் கடந்த தேர்தலைவிட இம்முறை மார்க்சிஸ்ட் கட்சி மீது கூடுதல் அதிருப்தியுடன் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைச் சரிசெய்து மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்கள் எப்படி மதிப்பைக் கூட்டிக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in