முக்கிய வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை பிரிவு: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்

முக்கிய வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை பிரிவு: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்

`தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஜாதி, மத மோதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்க 26 காவல் நிலையங்களில் தனி  விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக  டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி அரியமங்கலத்தை சேரந்த சதீஷ்குமார், சங்கர் என்பவர்கள்,  கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்  இவர்களுக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு போலீஸாரே விசாரிக்கின்றனர். பணிப்பளு காரணமாக விசாரணையை தொய்வு இல்லாமல் மேற்கொள்ள சட்டம், ஒழுங்கு போலீஸாரால் முடியவில்லை. இதனால் தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் முதல் கட்டமாக 11 தாலுகா காவல் நிலையங்களில் தனி விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் காவல் ஆணையரகத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். 

இப்பிரிவு கொலை, ஆதாய கொலை, வழிப்பறி, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள், ஜாதி, மத மோதல் வழக்குகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர் காவல் ஆணையர்கள் பரிந்துரைக்கும் வழக்குகள் ஆகியவற்றை  விசாரிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை விரைந்து நிறைவேற்றியதற்காக டிஜிபியை பாராட்டிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை  2023 பிப். 13-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in