பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு தரும் ‘பஸ்’!

இந்தியாவிலேயே தயாராகும் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து
பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு தரும் ‘பஸ்’!

ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் இயங்கும் பேருந்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வெள்ளோட்டமும் நடந்துவிட்டது. மகாராஷ்டிர மாநிலம் புணேயில் டிச.15 அன்று இப்பேருந்தின் வெள்ளோட்டம் நிகழ்ந்தது. ‘சென்டியன்ட் லேப்’ என்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதற்கு சிஎஸ்ஐஆர், தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம், மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆய்வுக் கழகம் ஆகியவை உதவியுள்ளன.

கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டுகின்றன. அனைவரின் கூட்டு ஒத்துழைப்பால் விரைவிலேயே இந்தியாவிலேயே இத்தகைய வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது வேலைவாய்ப்பைப் பெருக்குவதுடன், நாட்டுக்கு அரிய அந்நியச் செலாவணியையும் கோடிக்கணக்கில் மிச்சப்படுத்தும்.

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு, தொடர் இயக்கங்களுக்கான எரிபொருளைத் தயாரிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ‘சென்டியன் லேப்’ இறங்கியது. ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமோ அசாத்தியமானதோ இல்லை. அதேசமயம், இதற்காகும் செலவு அதிகம் என்பதால், இது நாட்கள் வரையில் இதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது புவி வெப்பமடைவதைத் தடுக்க, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்ற அக்கறை எல்லா நாடுகளுக்குமே ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி கச்சா பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியின் பயன்பாடு அதைவிட மிகுதி என்றாலும் இவ்விரு எரிபொருட்களின் பயன்பாட்டையும் குறைத்தாக வேண்டிய அவசியம் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் நிலக்கரியாவது விலை மலிவாகக் கிடைக்கிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை, எண்ணெய் வள நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பால்(!) உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது.

கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாகனங்களில் அதிகம் பயன்படுகிறது. அந்த எரிபொருள் தேவையை ஹைட்ரஜன் பூர்த்தி செய்யும் என்பதால், அதை முயன்று பார்க்கும் சோதனைகள் நடக்கின்றன. ஹைட்ரஜனில் இயங்கும் கார், வேன், கப்பல் போன்றவை வெளிநாடுகளில் தயாரித்து சோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டன. பேருந்தும் அதில் ஒன்று. இந்தியாவில் இப்போது அந்தச் சோதனை, ஹைட்ரஜன் தயாரிப்பிலும் அனுபவம் வாய்ந்த தேசிய நிறுவனங்களின் உதவி, வழிகாட்டலுடன் சென்டியன்ட் சோதனைச்சாலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பேருந்துகளை இயக்க மின்சார பேட்டரிகளைப் பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. எரிபொருள் செல்களைத் தயாரிப்பதிலும் பிரச்சினைகள் நிறைய உண்டு. அந்த வகையில், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அதைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்துவது எப்படி என்று முயன்று பார்க்கப்பட்டது.

9 மீட்டர் நீளம் (சுமார் 28 அடி) உள்ள 32 இருக்கைகளைக் கொண்ட, முழுக்கவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்தில் இந்த எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. 30 கிலோ கிராம் ஹைட்ரஜனைக் கொண்டு 450 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பேருந்தை ஓட்டிச்செல்ல முடியும். தொலைவுக்கேற்பவும் வேறு பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் இயந்திரத்தின் திறனைக் கூட்டிக்கொள்ள முடியும். இதில் உள்ள எரிபொருள் செல்கள் ஹைட்ரஜனையும் காற்றையும் பயன்படுத்தி, பேருந்தை இயக்குவதற்கான மின்சாரத்தைத் தயார் செய்கின்றன. இந்த பேருந்து வெளியேற்றுவது தண்ணீர் மட்டுமே. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு கிடையாது. டீசல் பேருந்துகளைப்போல கரி-கந்தகப் புகையை வெளியிடாமல், சுற்றுச்சூழலின் நண்பனாக இத்தொழில்நுட்பம் திகழ்கிறது.

டீசலில் ஓடும் பேருந்து ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 100 டன்கள் கரியுமில வாயுவை வெளியிடுகின்றன. இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. அப்படியானால் வெளியேறும் கரிப்புகை எவ்வளவு அதிகம் என்று புரிந்துகொள்ளலாம். பேருந்துகளைவிட சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் எண்ணிக்கை பல மடங்கு. அவை போக, வேன்கள் பலவிதங்களில் இருக்கின்றன. எனவே, டீசலுக்குப் பதிலாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பலவித எரிபொருள்களும் பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன.

ஹைட்ரஜன் செல்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை வழங்குவதன் மூலம், விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும். கரிப்புகை வெளியீடு குறைவதால் புவி வெப்பநிலையும் கணிசமாகக் குறையும். இந்தியாவில் காற்று மண்டல நச்சுகளும் பெருமளவு மட்டுப்படும். கச்சா பெட்ரோலிய எண்ணெய் இறக்குமதிக்காக கோடிக்கணக்கில் அந்நியச் செலாவணியைச் செலவிட வேண்டிய நிர்பந்தமும் குறையும். அதனால் நாட்டின் இதர அவசியத் தேவைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க முடியும்.

ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் உலகமெங்கும் இப்போது தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. மிகவும் மலிவான, எளிதான தொழில்நுட்பம் விரைவிலேயே புழக்கத்துக்கு வந்துவிடும் என்று அறிவுலகம் எதிர்பார்க்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in