புகார் அளித்தால் உடனடியாக தீர்வு: கடலூர் எஸ்பியின் கலக்கல் 'ஹலோ சீனியர்' திட்டம்!

புகார் அளித்தால் உடனடியாக தீர்வு: கடலூர் எஸ்பியின் கலக்கல் 'ஹலோ சீனியர்' திட்டம்!

கடலூர் மாவட்டத்தில் முதியவர்களின் நலன் காக்கவும்,  அவர்களின் அவசர உதவிக்கு காவல்துறையை எளிதாக தொடர்பு கொள்ளவும் கடலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் 'ஹலோ சீனியர்'  என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்காக தனியாக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு அதற்கு வரும் அழைப்புக்களின் பேரில்  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த பத்து மாதத்தில் 200க்கும் மேற்பட்ட அழைப்புக்களில் முதியவர்களால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு அவை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சிந்தனையில் உருவான இந்த திட்டத்தை அவரே நேரடியாக கண்காணித்து நிர்வகித்து வருகிறார். தொலைபேசி அழைப்புகளையும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அன்றாடம் அவரே மேற்பார்வை செய்து வருவதால்,  அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ஹலோ சீனியர் திட்டத்தின் கீழ் வரும் அழைப்புக்களில் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஊமங்கலம் அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த தனபால் ( 60 ) என்பவர் நேற்று  ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது வீட்டில் இருந்து தண்ணீர் பக்கத்து வீட்டிற்கு சென்றதால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, ஜெயசித்ரா,  செல்வராசு ஆகிய மூவரும் சேர்ந்து தனது மகன் மணிகண்டனை அடித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார். 

அதன்பேரில் இன்று   ஊமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் விசாரணை மேற்கொண்டு அவர்கள்  மூவர் மீதும்  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இப்படி உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு  முதியவர் தரப்பில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஹலோ சீனியர் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் உடனடியாக தீர்வு காண அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in