‘ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது இயலாதது’ நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது எனவும், இது அரசின் கொள்கை முடிவு எனவும் தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழக அரசு தரப்பில் ஆஜராகி பல்வேறு வாதங்களை முன் வைத்தார். ”ரம்மி நேரடியாகவும், ஆன்லைனில் விளையாடுவதும் ஒன்றல்ல; இரண்டும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போது தான், அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்” என கபில் சிபல் வாதிட்டார்.

மேலும், ”18 வயதுக்கு குறைவானவர்களை விளையாட அனுமதிப்பதில்லை எனவும் சுய அறிவிப்பு அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுசம்பந்தமான சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என விளக்கப்படவில்லை. ரம்மி, திறமைக்கான விளையாட்டாக இருக்கலாம். அதற்காக சூதாட்டத்துக்கு அனுமதிக்கலாமா?” எனவும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

கபில் சிபல்
கபில் சிபல்

”அதுமட்டுமன்றி ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள், வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. அதில் ஒரு பகுதி ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கு செல்கிறது. ஆனால் நேரடியாக விளையாடும் போது இதுபோல நடப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டுக்களால், 76 சதவீத குழந்தைகள் கண்பார்வை பாதிப்பு, படிப்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் நேர்வதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்” என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

இதற்கு எதிர்தரப்பில், “ஆன்லைன் விளையாட்டுக்களை அரசு ஒழுங்குபடுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது” என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ”எது சூதாட்டம்? குழந்தைகள் எப்போது விளையாடலாம்? என அரசு எப்படி முறைப்படுத்த முடியும்? தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுக்களையும் ஒழுங்குபடுத்த முடியாது. பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு” என தொடர்ந்து வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in