ரூ.1000 அனுப்புங்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் வீட்டிற்கு வரும்: மோசடி டிரஸ்ட் மீது வழக்கு

ரூ.1000 அனுப்புங்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் வீட்டிற்கு வரும்: மோசடி டிரஸ்ட் மீது வழக்கு

ஆயிரம் ரூபாய் அனுப்பினால் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என வசூல் செய்த டிரஸ்ட் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதாகும். நக்கீரன், சிவபெருமான் வார்த்தைப் போர் நடந்ததாக சுட்டிக்காட்டப்படும் இந்த கோயில், கட்டிக்கலையின் உச்சமாகும்.

இக்கோயிலைப் பொறுத்தவரை நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களைக் கொண்டது. இக்கோயிலில் சம அளவில் முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி அம்மன் சன்னதியும், சுந்தரேசுவரர் சன்னதியும் தனித்தனியே அமைந்துள்ளன. சக்தியின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கும் முக்கிய இடங்கள் மூன்று உண்டு. ஒன்று காஞ்சியில் காமாட்சி, மற்றொன்று காசியில் விசாலாட்சி, மூன்றாவதாக மதுரையில் மீனாட்சி என்பர்.

இப்படிப்பட்ட கோயிலுக்கு நாள் தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தத்கள் வருகின்றனர். அப்படி வருபவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் குங்குமம் பிரசாதத்தை முக்கியமாக வாங்கிச் செல்வார்கள். அந்த அளவிற்கு இந்த கோயிலின் குங்குமம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

இந்த நிலையில், மதுரை கடச்சனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு, ரூ.1000 டிரஸ்ட் வங்கிக் கணக்‍கிற்கு அனுப்பினால் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் குங்குமம் வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்‍கப்படும் என மோசடியான விளம்பரத்தை செய்திருந்தது.

இந்த விளம்பரத்தை உண்மையென நம்பி ஏராளமான வெளிநாட்டு பக்‍தர்கள் டிரஸ்ட் பெயரில் ரூ.1000 செலுத்தியதாக மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காவேரி சேவா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது மீனாட்சி அம்மன் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வசூல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் நடைபெற்ற இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in