பணம் அனுப்புங்கள், பரிசு விழுந்திருக்கிறது; டிஜிபி பெயரில் நடந்த மெகா மோசடி: 7.25 லட்சத்தை இழந்த காவலர்

பணம் அனுப்புங்கள், பரிசு விழுந்திருக்கிறது; டிஜிபி பெயரில் நடந்த மெகா மோசடி: 7.25 லட்சத்தை இழந்த காவலர்

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திபாபு புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து காவலரிடம் 7.25 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு 12-வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருப்பவர் கார்த்திகேயன். இவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு படத்துடன், காவல்துறையின் மூலம் பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும், அமேசான் மூலம் பல லட்ச ரூபாய் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த குறுஞ்செய்தியை நம்பி கார்த்திகேயன், தனது வங்கிக் கணக்கில் இருந்து சிறிது, சிறிதாக சுமார் 7.25 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். கடந்த 2 மாதங்கள் கழித்தும் பரிசு பணம் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், சைபர் கிரைம் தனிப்படை அமைத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகிறார்.

இந்த தனிப்படை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மோசடி குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே மோசடிக்கும்பலிடம் பணத்தை இழந்த சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in