ராஜ் தாக்கரேயை அழைத்துப் பேசிய ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிர அரசியலில் மற்றுமொரு பரபரப்பு

ராஜ் தாக்கரேயை அழைத்துப் பேசிய ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிர அரசியலில் மற்றுமொரு பரபரப்பு

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் உச்சமடைந்திருக்கும் நிலையில், சிவசேனா கட்சியின் அதிருப்தித் தலைவரான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேயைத் தொடர்ந்துகொண்டு பேசியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ் தாக்கரேயை இருமுறை தொலைபேசியில் அழைத்துப் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறியிருக்கிறார்.

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ் தாக்கரே, நேற்று மாலைதான் டிஸ்சார்ஜ் ஆனார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, சம்பிரதாயமாக அவரை அழைத்த ஏக்நாத் ஷிண்டே, கையோடு அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்.

சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேயின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ராஜ் தாக்கரே. ஆரம்பத்தில் தனது பெரியப்பா பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இருந்த ராஜ் தாக்கரே, பின்னர் கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனும் அதிருப்தியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி 2006-ல் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியை உருவாக்கினார். சிவசேனா கட்சியைத் தொடர்ந்து விமர்சித்துவரும் ராஜ் தாக்கரேயுடன் அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கைகோப்பது மகாராஷ்டிர அரசியலில் மேலும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏ-க்களை ‘நடைபிணங்கள்’ என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார். இதையடுத்து, “இந்துத்வா கொள்கையைப் பின்பற்ற எங்கள் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும், அதை எங்கள் தலைவிதியாகக் கருதுவோம்” என ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in