ஹெல்மெட் போடாத போலீஸாரின் டூவீலர்கள் பறிமுதல்: டிஜிபி திடீர் உத்தரவு

ஹெல்மெட் போடாத போலீஸாரின்  டூவீலர்கள் பறிமுதல்: டிஜிபி திடீர் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டி செல்லும் காவலர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயணிப்போருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் பயணிப்பதாகவும், ஆனால் நகரப் பகுதிகளிலும், கிரம்புறங்களிலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்வோரில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பலர் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவது இல்லை என தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் காவலர்களின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வைக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு வந்து காண்பித்த பின்பே வாகனங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அவ்வாறு செயல்படும் காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதிக்க வேண்டும் என்றும், போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாகக் கூறி வாக்குவாதம் செய்யும் காவலர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் தங்கள் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in