பப்ஜி விளையாட்டில் அறிமுகமான இந்திய காதலனுக்காக பாகிஸ்தானிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீமா ஹைதர் என்ற பெண் மீது, இந்திய உளவு அமைப்புகள் சந்தேகம் கொண்டிருக்கின்றன.
பாகிஸ்தானை சேர்ந்த 30 வயது சீமா ஹைதரும், டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞரும் 2019ல் பப்ஜி விளையாட்டில் அறிமுகமானார்கள். அதன் பின்னர் இதர ஆன்லைன் உபாயங்கள் வாயிலாக தங்களது காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றனர்.
மணமாகி 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வாழ்ந்த சீமா ஹைதர், இந்திய காதலனை கரம் பிடிக்க எல்லை தாண்ட முடிவு செய்தார். சொந்த வீட்டை விற்று தேற்றிய பணத்தோடு துபாய் வழியாக நேபாளம் வந்தார். அங்கே காத்திருந்த சச்சினுடன் கோயில் ஒன்றில் வைத்து இந்து முறைப்படி திருமணம் முடித்தார். சச்சின் - சீமா ஹைதர் மற்றும் சீமாவின் 4 குழந்தைகள் ஆகியோர் நேபாளத்திலிருந்து உத்திர பிரதேசத்துக்கு பேருந்து மூலம் வந்து சேர்ந்தனர்.
சச்சின் தந்தையின் உதவியோடு தனியாக வீடெடுத்து வாழ்ந்து வந்தனர். உள்ளூர் போலீசுக்கு மூக்கு வேர்த்ததில், பாகிஸ்தானிலிருந்து சட்ட விரோதமாக புகுந்த சீமாவையும் அவருக்கு உதவியதாக சச்சின் மற்றும் அவரது தந்தையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் பிணையில் வந்தவர்களிடம் உத்திர பிரதேசம் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு மற்றும் ஐபி உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்பினர் தங்களது விசாரணைகளை தொடங்கி உள்ளனர்.
இந்த விசாரணைகளின் வழியாக, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கையாளாக சீமா இருக்கக்கூடும் என சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தானின் சாதாரண இல்லத்தரசியான சீமா நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதும், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் ராணுவத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதும் அந்த சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.
மேலும் இந்தியாவின் ஆதார் போன்று பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் சீமா, அதனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம்தான் புதிதாக பெற்றிருக்கிறார். இத்தனை தாமதமாக பெற்றதன் காரணத்தை அவரால் விளக்க முடியவில்லை. சச்சினைத் தவிர்த்து, டெல்லி பகுதியின் பல்வேறு நபர்களை குறிவைத்து பப்ஜி விளையாட்டு மூலம் சீமா அறிமுகம் பெற்றிருப்பதும் இந்திய உளவு அமைப்புகளின் சந்தேகத்தை அதிகரித்துள்ளன.
இதனையடுத்து சீமா ஹைதரை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.