வீட்டில் தனித்து இருந்தவர்களிடம் சேட்டை காட்டிய காட்டு யானை; சிறுமி அழுததும் வால் சுருட்டி பின்வாங்கிய அதிசயம்!

உயிர் தப்பிய பாலாமணி
உயிர் தப்பிய பாலாமணி

வீட்டை உடைத்து அங்கிருந்த பெண்ணை விரட்ட முயன்ற காட்டு யானை, அந்த பெண் கையில் இருந்த குழந்தையை பார்த்ததும், அமைதியாக திரும்பி சென்றது. இந்த ஆச்சரிய சம்பவம் கோவை அருகே அரங்கேறி இருக்கிறது.

கோவை கணுவாய் அடுத்துள்ள சோமையனூரில் பாலாமணி(45) என்ற பெண் குடியிருந்து வருகிறார். கூலி வேலை செய்துவரும் இவர் மண்ணால் கட்டிய வீட்டில் தங்கியுள்ளார். இவரது தம்பியின் குழந்தை சுவாதி (6) அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். பாலாமணியும் சுவாதியும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

அருகே நல்லதம்பி என்பவரின் தோட்டத்தில்  வெட்டிய வாழைத்தாரை பாலாமணி வீட்டின் அருகே அடுக்கி வைத்திருந்தனர். இன்று அதிகாலை மூன்று மணி அளவில் அங்கு வந்த காட்டுயானை ஒன்று, வாழைப்பழங்களை வளைத்து சாப்பிட்டது. மேலும் பாலாமணி வீட்டின் மண்சுவர் அருகே வந்து வீட்டின் கூறை ஓடுகளை தட்டிவிட்டுள்ளது. 

இதை கவனித்த பாலாமணி, யானை சுவற்றை உடைத்து வீட்டிற்குள் வந்து விடும் என்ற அச்சத்தில் குழந்தை சுவாதியை தூக்கி தோளில் சுமந்தபடி, வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இதைப் பார்த்த யானை அவரை துரத்திச் சென்று  தும்பிக்கையால் கீழே தள்ளி உருட்டியுள்ளது. இருவரும் கீழே விழுந்ததில் சிறுமி சுவாதி பயத்தில் சத்தம் போட்டு கத்தியுள்ளார். 

பாலாமணியின் அருகில் அலறியபடி தரையில் கிடந்த சிறுமியை பார்த்ததும் ஆச்சரியமாய் யானை தனது சேட்டையை நிறுத்தியது. சிறிது நேரம் இருவரையும் பார்த்துவிட்டு, அதன்பின் அவர்களை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு ஆனைகட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

சிறுமி சுவாதி காயமின்றி தப்பினார். பாலாமணி சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி அழுததைப் பார்த்த யானை அமைதியடைந்து, பின்னர் விலகிச் சென்றதில் அந்தப் பெண்ணும் உயிர் தப்பினார். யானையின் இந்த செயல்  இப்பகுதியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in