புதுச்சேரியில் நாளை ஜி20 மாநாடு; 5 இடங்களில் 144 தடை!

புதுச்சேரியில் நாளை ஜி20 மாநாடு; 5 இடங்களில் 144 தடை!

புதுச்சேரியில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நாளை(ஜன.30) தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அங்கு இன்று முதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஜி20  நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கின்றன. அவ்வகையில் புதுவையிலும் 2 நாள் கூட்டங்கள் நாளை தொடங்கி நடைபெற இருக்கின்றன. 

இதில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கின்றனர். 30ம் தேதி புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது. 31-ந் தேதி ஆரோவில் உட்பட பல இடங்களை பிரதிநிதிகள் பார்வையிடுகின்றனர்.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட புதுவை மாநில அரசின் சார்பில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. டிஐஜி தலைமையில் 37 பேர் கொண்ட சிறப்பு காவல் பிரிவு உருவாக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஜி20 மாநாட்டை ஒட்டி புதுவை விமான நிலையம் அக்கார்ட்ஸ் ரெசிடென்சி, ரேடிசன் ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகள் மற்றும் சுகன்யா கன்வென்ஷன் சென்டர் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இன்று முதல் 1ம் தேதி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளுக்கான போக்குவரத்தில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in