மதுரையில் 40 ஆண்டுகளாக நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்த ஊழியருக்கு பிரிவு உபசார விழாவை பொதுமக்கள் நடத்தியுள்ளனர்.
செல்போன் காலத்திற்கு பிறகு உள்ளங்கையில் உலகம் வந்துவிட்ட நிலையில் மக்களிடையே கடிதப்போக்குவரத்து குறைந்துவிட்டது. இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதள ஆதிக்கத்தில் இந்த தலைமுயைினர், கடிதப்போக்குவரத்தை சுத்தமாக மறந்து போய்விட்டனர்.
அரசு வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு, பணி நியமனம் ஆணை உள்ளிட்ட முக்கிய தகவல்களுக்கான தபால் கடிதங்களே, இந்த தலைமுறையினருக்கான அஞ்சல் தபால் போக்குவரத்தாக உள்ளன. மீதமுள்ள அலுவலக கடிதங்கள், பார்சல் சர்வீஸ் போன்றவற்றிக்காக தனியார் கூரியர் நிறுவனங்களை நாடுகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் துறையின் சேவை குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மதுரை நெல்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக தபால் பட்டுவாடா செய்த அஞ்சல்காரருக்கு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் ஒன்றிணைந்து அழைப்பிதழ் அச்சடித்து பாசத்துடன் பிரிவு உபசாரவிழா நடத்தியுள்ளனர். பொது மக்களின் பாசத்தால் நெகிழ்ச்சியடைந்த அந்த அஞ்சல்காரர் பெயர் கண்ணன், இதுவரை தினமும் பார்த்து தபால்களைப் பட்டுவாடா செய்த மக்களை இனி பார்க்க முடியாது என்ற ஏக்கத்தில் ஒவ்வொரிடமும் கைகொடுத்து கண் கலங்கியபடி பிரியா விடைபெற்றார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ‘‘அஞ்சல்காரர் கண்ணன், 40 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார். அவர் தன்னுடைய பணி காலம் முழுவதும் நடந்து சென்றே தபால்களை பட்டுவாடா செய்துள்ளார். சைக்கிளில் கூட சென்றது இல்லை. மதுரையை தாண்டி டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியில் இருந்து தினமும் பஸ்சில்தான் அஞ்சல் அலுவலகத்திற்கு வருவார். அங்கு தபால்களைச் சேகரிக்கும் அவர் நடந்தேதான் மாலை வரை மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகர், சுங்கம் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் ஆகியவற்றிற்கு தபால்களை பட்டுவாடா செய்வார்.
கடைகள், வீடுகளில் ஆட்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் போன் நம்பருக்கு அழைத்து காத்திருந்து அவர்களிடம் தபால்களை ஒப்படைத்துவிட்டுதான் புறப்பட்டுச் செல்வார். முகவரியில் ஆட்கள் இல்லாவிட்டால் உனடியாக தபால்களைத் திருப்பி அனுப்பமாட்டார். அவர்கள் உறவினர்கள் மூலம் முடிந்தவரை அந்த தபால்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப் பார்ப்பார். படிக்க தெரியாதவர்களிடம் தபால்களைப் பிரித்து பொறுமையாக படித்து காட்டிவிட்டுச் செல்வார். மக்களிடம் மிக நெருக்கமாக பணிபுரிந்ததால் அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம் ’’ என்றார்.
விழா நாயகரான கண்ணன் கூறுகையில், ‘‘நான் தபால்பட்டுவாடா செய்வதற்காக நடந்து செல்லும்போது அந்த வழியாக வரும் மக்கள், என்னை அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று அடுத்து தபால் பட்டுவாடா செய்யும் இடத்தில் கொண்டு போய்விடுவார்கள். இந்தளவிற்கு மக்கள் என் மீது பாசமாக இருந்தார்கள். அவர்களுக்கும் நேர்மையாக இருந்துள்ளேன். அந்த நேர்மைக்கும், என்னுடைய கடமையை சரியாக செய்ததால் கிடைத்த பரிசுதான் மக்கள் எடுத்த இந்த விழா ’’ என்றார் நெகிழ்ச்சியாக.