முதல் மனைவிக்குத் தெரியாமல் போதகர் உதவியுடன் இரண்டாவது திருமணம்: ஆட்டோ டிரைவர் கைது!

விஜின் குமார்
விஜின் குமார்முதல் மனைவிக்குத் தெரியாமல் போதகர் உதவியுடன் இரண்டாவது திருமணம்: ஆட்டோ டிரைவர் கைது!

முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் 18 வயது இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜின்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல், 18 வயதான இளம்பெண்ணை விஜின்குமார் ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

மேக்காமண்டபம்  பகுதியைச் சேர்ந்த  பெந்தேகோஸ்தே சபை போதகர் பிரின்ஸ் என்பவர் உதவியுடன்தான் இந்த இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே மார்த்தாண்டம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் 18 வயதான இளம் பெண்ணின் தாயார் தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதில், விஜின் குமார்  முதல் மனைவியுடன் செய்த திருமணம் நீதிமன்றம் மூலம் விவாகரத்து ஆனதாக பொய் கூறி தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதுகுறித்து முதல் மனைவியிடம் விசாரித்ததில் கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டையிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றதாகவும் இதுவரையிலும் விவாகரத்து செய்யவில்லை எனவும் கூறியுள்ளார் .இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜின் குமார் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ததாக முதல் மனைவி புகார் கொடுத்தார். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் 18 வயது பெண்ணின் தாயார், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜின்குமாரின் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் விஜின் குமார் மற்றும் போலித் திருமணச் சான்று வழங்கிய போதகர் பிரின்ஸ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவிய சிவக்குமார் , சுரேஷ் ஆகிய இருவர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையறிந்த விஜின் குமார் இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண்ணுடன் தலைமறைவானார். உடனடியாக அவரை பிடிக்க காவல்துறை  உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்து தனிப்படையினர் செல்வதற்கு முன்பாகவே அங்கிருந்து விஜின் குமார் இளம்பெண்ணுடன் தப்பிச் சென்று விட்டார். தனிப்படையினர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

அதன் பின்னர் சென்னை உட்பட பல இடங்களில் சுற்றி வந்தவர் கடைசியாக வேளாங்கண்ணிக்கு சென்று அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட  தனிப்படை போலீஸார், வேளாங்கண்ணிக்குச் சென்று விஜின் குமாரை கைது செய்தனர். அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். 

அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸாரிடம், ஒப்படைக்கப்பட்ட விஜின் குமாரிடம் விசாரணை நடத்தி கைது செய்த  போலீஸார், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டபடி விஜின்குமார் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மத போதகரையும் போலித் திருமணத்திற்கு உதவியவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in