மீண்டும் எம்.பி; ராகுல் காந்தியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் தொடர் தோல்வி, பாரம்பரிய தொகுதியான அமேதியிலேயே தோற்றது, பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களின் தோல்விகள், எம்பி தகுதியிழப்பு எனத் தொடர்ந்து தோல்விகளிம் ஊடாகவே உழன்று வருகிறார் ராகுல் காந்தி. இந்த சூழலில்தான் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் எம்பி ஆகியிருக்கிறார் ராகுல் காந்தி. இனிவரும் நாட்கள் அரசியலில் அவரது இரண்டாவது இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி முதன்முறையாக 2004 ல் எம்பி ஆனபோது அவருக்கு டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. 2004-ல் காங்கிரஸ் ஆட்சி, 2009-லும் காங்கிரஸ் ஆட்சி என ராகுலின் தொடக்க கால அரசியல் இலகுவாகவே இருந்தது. 2010-க்குப் பின்னர் காங்கிரஸுக்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி போதாத காலகட்டம்தான்.

அதன்பின்னர் ராகுல் தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்தது. ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள், உட்கட்சி பிரச்சினைகள், பாஜகவின் விஸ்வரூபம், மோடியின் எழுச்சி என மொத்தமாக சேர்ந்து 2014-ல் காங்கிரஸை படுபாதாளத்தில் தள்ளியது. அதன்பின்னர் பல்வேறு மாநிலத் தேர்தல்களிலும் தோல்வி முகம்தான்.

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி

எப்படியாவது காங்கிரஸை கரை சேர்க்கலாம் என்ற நம்பிக்கையில் 2017-ல் அக்கட்சியின் தலைவரானார் ராகுல். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான அமேதியில்கூட அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்தார்.

ஒரு காலத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியாக இருந்த காலம் மாறி, இந்தியாவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் இரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி என கட்சி சுருங்கிப்போனது. இப்போது அது 4 மாநிலமாகி உள்ளது. ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை பெரிதாக நம்பிய நிலையில், அதன்பின்னர் நடந்த தேர்தல்களிலும் இமாசல், கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பெரிதாக காங்கிரஸால் சோபிக்க முடியவில்லை.

இந்தச் சூழலில்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்று மார்ச் 24-ம் தேதி எம்பி பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டார் ராகுல். இதையடுத்து ஏப்ரல் 4-ல், 19 ஆண்டுகளாக வசித்த துக்ளக் சாலை அரசு பங்களாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். சொந்த தொகுதியை இழந்து, தலைவர் பதவியை இழந்து, கடைசியாக எம்பி பதவியையும் இழந்து அரசியலின் விளிம்புக்கே வந்தார் ராகுல். இந்த நிலையில் ராகுல் காந்தி இப்போது மீண்டும் எம்பி ஆகியிருக்கிறார். சொல்லப்போனால் இனி வரும் ஆட்டம் ராகுல் காந்தியின் இரண்டாவது இன்னிங்ஸ்தான்.

ராகுல் காந்தி பக்கம் சாதகமாக வீசும் காற்று!

பாஜக நாடு முழுவதுமே அமைப்பு ரீதியாக மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. பிரதமர் மோடியின் மீதான பிம்பமும் மக்கள் மத்தியில் பெரிதாக சரிந்துவிடவில்லை. ஆனாலும் கூட 10 ஆண்டுகள் எனும் நீண்டகால ஆட்சி என்பது இயல்பாகவே பாஜக மீதான ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் விதைத்துள்ளது. இதுமட்டுமின்றி மாநிலங்கள் அளவில் உள்ள சூழல்கள் பாஜகவுக்கு பாதகமாக மாறியுள்ளது.

தேசிய அளவில் பாஜக வலுவான நிலையில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை வலுவடைந்துள்ளது. இது மாநில கட்சிகளுக்கோ அல்லது காங்கிரஸுக்கோ சாதகமாகும். அந்த வகையில்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றது. இந்தச் சூழலில் சரியாக காய்நகர்த்தினால் அது ராகுல் காந்திக்கு பலமாக கைகொடுக்கும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியும் இதனை உணர்ந்துதான், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’க்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஏனென்றால் இந்தக் கூட்டணியால் மற்ற கட்சிகளைவிடவும் காங்கிரஸ்தான் அதிகம் ‘அட்ஜஸ்ட்’ செய்யவேண்டிய சூழல் உருவாகும். இதனால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனாலும் பரவாயில்லை, எப்படியேனும் பாஜகவை வீழ்த்தவேண்டும் என்றுதான் இந்த அக்னி பரீட்சையில் காங்கிரஸ் குதித்துள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் கூட்டணிக்குள் தலைமை தாங்கும் சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அவரின் நம்பிக்கை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

எம்பி பதவியை மீட்டெடுத்தவுடனே மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கர்ஜித்த ராகுல் காந்தி, “ராவணன் மேகநாதன், கும்பகர்ணனின் பேச்சைத்தான் கேட்பார். அதுபோல மோடி, அமித் ஷா, அதானியின் பேச்சை மட்டும் கேட்கிறார். மக்கள் பேச்சை கேட்பதேயில்லை” என்றார். அதுபோல, தேச ஒற்றுமை, தேச பக்தி, மதநல்லிணக்கம் போன்ற விஷயங்களையும் சமீப காலமாக அழுத்தமாக முன்வைக்கிறார் ராகுல். மணிப்பூர், ஹரியானாவின் கலவர சூழல்கள், ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் பாஜக மீது கோபத்தை கிளறியுள்ளது. எனவே, இதனையே முக்கிய பிரச்சினையாக தேர்தலுக்கு கையில் எடுக்கும் யோசனையும் ராகுலிடம் உள்ளது.

ராகுல், மோடி
ராகுல், மோடி

ராகுல் காந்தி முன் உள்ள சவால்கள்?

எப்படியோ எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி 75 சதவீதம் சாத்தியமாகிவிட்டது. ஆனால், இந்தத் தேரை தேர்தல் வரை பத்திரமாக இழுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு மறைமுகமாக ராகுலின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால், ‘இந்தியா கூட்டணி’யில் உள்ள கட்சிகளை சல்லி சல்லியாக உடைக்க ஒவ்வொரு நாளும் புதுப் புது வியூகங்களுடன் பாஜக மோதிக்கொண்டிருக்கிறது.

சரத் பவார், நிதிஷ், அகிலேஷ், கேஜ்ரிவால் என சிலரையாவது இக்கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட எல்லா வகையிலும் முயற்சியை தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே, எப்படியாவது இக்கூட்டணியை தேர்தல் நாள்வரை ஒற்றுமையாக கட்டிவைக்கும் பெரிய பொறுப்பு ராகுலின் கையில் உள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்துவதைவிடவும் ராகுலின் மிக முக்கியமான பணி, உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்வதுதான். ஏனென்றால், ஆட்சி இல்லையென்றாலும் காங்கிரஸில் எல்லா மாநிலத்திலும் கோஷ்டிக்கு பஞ்சமிருக்காது. இந்த கோஷ்டி பஞ்சாயத்துக்கு ராகுல் காந்தி முடிவுரை எழுதினால் மட்டுமே அவரால் கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். உள்ளிருந்து குழிபறிப்பவர்கள், வாய்த்துடுக்குப் பேர்வழிகளை ஓரங்கட்டிவிட்டு குடும்ப அரசியலை ஒழித்துக்கட்டிவிட்டு பெருமளவில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் ‘கை’ கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சலாம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

காங்கிரஸுக்கு இப்போதைய முக்கியத் தேவை வெற்றி எனும் உற்சாக டானிக்தான். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ளன. நல்வாய்ப்பாக இவையனைத்துமே காங்கிரஸ் பலமாக உள்ள மாநிலங்கள். எனவே, ராகுல் காந்தி புதுப் பாய்ச்சலுடனும் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து இத்தேர்தலில் குறைந்தது 3 மாநிலங்களையாவது காங்கிரஸை ஜெயிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸார் நம்பிக்கையோடு வேலை செய்வார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பொதுவாகவே, திடீரென லைம் லைட்டிற்கு வருவார், திடீரென காணாமல் போவார். பார்ட் டைம் அரசியல்வாதி என்பதுபோன்ற விமர்சனங்கள் ராகுல் மீது அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. இதனை உடைத்து தினம் தினம், நொடிக்கு நொடி என இன்னும் ஓராண்டுகள் அரசியல் களத்தை அவர் ஆக்கிரமித்தால் மட்டுமே, மோடி எனும் மாபெரும் ஆற்றலுக்கு எதிராக ராகுலால் சண்டை செய்ய முடியும்.

அப்படிச் செய்கிறாரா பார்ப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in