நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

அழிந்து வரும் நிலையில் உள்ள கடற்பசு இனத்தைக் காக்கும் நோக்கத்தில் கடற்பசு காப்பகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டி இனமாகக் கருதப்படுவது கடற்பசு இனம். இவை கடற்புற்களை உண்டு வாழ்கின்றன. பாக்.விரிகுடாவை ஒட்டிய கரையோர மக்கள், கடற்பசுவைப் பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு, பலமுறை தங்கள் மீன்பிடி வளையில் சிக்கிய கடற்பசுக்களைக் கடலில் விட்டுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்திய அளவில் அழிந்து வரும் இனமான கடற்பசு இனத்தையும், அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு காப்பகம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு 3.09.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தது.

இதைச் செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீட்டர் பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்.விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்து, அரசாணை (நிலை எண்.165) இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புதிய கட்டுப்பாடுகளோ, நிபந்தனைகளோ அப்பகுதி மக்களுக்கு விதிக்கப் போவதில்லை எனத் தெரியவருகிறது. தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in